பயிர் காப்பீடு தொகை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றியதாக கூறி மாவட்ட வேளாண் இணை இயக்குனர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு 4 லட்சத்து 36 ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்டட வேளூர் கிராமத்தில் கடந்த 2020-2021 ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இப்பகுதியில் 25.35 சதவீத பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் வேளூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட 18 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வரவில்லை என்றும் இந்த கிராமத்திற்கு உட்பட்ட மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் காப்பீடு பெறுபவர்களுக்கான ஒட்டப்பட்ட அறிவிப்பு நோட்டீஸில் இவர்கள் பெயர் இருந்தும் பயிர் காப்பீடு தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தொடர்ந்து அலை கழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்த பிறகு சரவணன், சந்திரா, உமா, வைத்தியநாதன், பாஸ்கரன், லலிதா ஆகிய ஆறு விவசாயிகளுக்கு மட்டும் வங்கி கணக்கில் இழப்பீடு தொகை காப்பீடு நிறுவனத்தால் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையினை உரிய காலத்தில் வழங்காதது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுவதாகவும் வழக்கு தொடர்ந்த 18 விவசாயிகளில் ஆறு விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வரவு வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையில் மற்றும் 18 விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு ஒரு விவசாயிக்கு 5000 ரூபாயும் வழக்கு செலவு தொகை 2500 ரூபாயும் என மொத்தம் நாலு லட்சத்து 36 ஆயிரத்து 57 ரூபாயை மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி பொது மேலாளர் திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் திருத்துறைப்பூண்டி வட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் ஆகியோர் சேர்ந்தோ அல்லது தனித்தோ வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.