மோடி வருகை: கூட்டணி குழப்பம் தீர்க்க எடப்பாடி அவசர சந்திப்பு! முக்கிய முடிவுகள் வெளியாகுமா?
27ம் தேதி காலை பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு, ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.

தஞ்சாவூர்: வரும் 26ம் தேதி இரவு திருச்சிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி மறுநாள் காலை ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரம் சென்று ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி குழப்பங்களை தீர்க்க பிரதமரை சந்திக்க நேரம் கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்து விட்டு வரும் தூத்துக்குடிக்கு வரும் 26ம் தேதி வர உள்ளார். தொடர்ந்து, விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதையடுத்து, அவர் இரவு திருச்சிக்கு வருகிறார். 27ம் தேதி காலை பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு, ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.
இதற்கிடையில் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி தரப்பில் இருந்து நேரம் கேட்க உள்ளதாகவும், முக்கிய நிர்வாகிகளுடன் அவர் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. சென்னையில் நடந்த சந்திப்பில், 2026 சட்டப்பேரவை தேர்தலை அதிமுக-பாஜ இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அமித்ஷா தெரிவித்து இருந்தார். இடையில் பல்வேறு குழப்பங்கள், ஆட்சியில் பங்கு என்பது போன்ற செய்திகளால் கூட்டணியில் விரிசல் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தலைமையில் தேர்தல் கூட்டணி என்று பாஜக தலைவர்கள் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கூட்டணி பற்றி கவலையில்லை, ஆட்சியில் பங்கு தர நான் ஏமாளி அல்ல என பேசியது, பாஜவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாஜவை சேர்ந்த சிலர், ஆட்சியில் பங்கு என்று கூறி வருகின்றனர். ஆனால், அதிமுக அதை மறுத்து வருகிறது. இந்நிலையில், திருச்சி வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி நேரம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நான் மட்டும் விடுவேனா என்பது போல் ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்க உள்ளாராம். அதிமுக- பாஜ கூட்டணிக்கு பிறகு, பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) நேற்று திருச்சி வந்தனர். அவர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, திருச்சியில் பிரதமர் மோடி தங்க உள்ள இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில், இந்தாண்டு ஆடி திருவாதிரை விழா நேற்று தொடங்கியது. இது முப்பெரும் விழாவாக ஒரு வாரம் நடைபெறுகிறது. துவக்க விழாவையொட்டி பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பிரதமர் வருகையை ஒட்டி திருச்சி மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் திருச்சியில் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















