விஜய் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்கணும்... சொன்னது யார் தெரியுங்களா?
நான் ஓட்டு போடுகிறேன். எனது படம் அரசியல் பேசுகிறது. 4 பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பது கூட அரசியல் தான். கட்சியில் இருந்தால் தான் அரசியல் என்பது கிடையாது.

தஞ்சாவூர்: அரசியலில் இருந்தாலும் நடிகர் விஜய் வருடத்திற்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை என்று நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வெற்றி இ-ஸ்கொயர் தியேட்டரில் நடிகர் சசிகுமார் நடித்த மை லார்ட் என்ற திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் சசிகுமார், நடிகை, இயக்குனர் ஆகியோர் மக்களுடன் அமர்ந்து திரைப்படம் பார்த்தனர். பின்னர் நடிகர் சசிகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களோடு மக்களாக இருந்து படத்தை பார்க்க சந்தோஷமாக இருந்தது. மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து படத்தை பார்க்கிறார்கள். நல்ல சினிமா கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்து இருக்கிறது. மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்களும் கலராக தான் இருக்கிறோம். எங்களை யாரும் பார்க்க மாட்டேங்கிறாங்க என்பது தான் காதலர் தின பஞ்ச் டயலாக்.
ஜனநாயகம் படம் மறு தணிக்கைக்கு சென்று இருப்பது சந்தோஷம் தான். சினிமாவில் விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தும், மார்க்கெட் இருந்தும் அதை எல்லாம் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து இருக்கிறார். அவரது தனிப்பட்ட விருப்பம் அது. எனது ஆசை அரசியலில் இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படம் நடிக்க வேண்டும்.
நான் ஓட்டு போடுகிறேன். நான் அரசியல் பேசுகிறேன். எனது படம் அரசியல் பேசுகிறது. 4 பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பது கூட அரசியல் தான். கட்சியில் இருந்தால் தான் அரசியல் என்பது கிடையாது. உங்களது எண்ணங்களும், செயல்களும் கூட அரசியல் தான். அரசியலில் இருந்தாலும் படம் நடிக்க வேண்டும் என்று உதயநிதியிடமே நான் சொல்லி இருக்கிறேன். எல்லா கட்சியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் எல்லோருக்கும் பொதுவானவாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் துரை.சுதாகர் பேசும்போது, ஒவ்வொரு படைப்புகளும் ஒரு கருத்தை சொல்லும். இந்த படத்தை பொருத்தவரை பல கருத்துக்களை சொல்கிறது. அதுவும் சமூகம் சார்ந்த, நம் குடும்பம் சார்ந்த கருத்துக்களை மிகவும் ஆழமாக சொல்கிறது. இந்த மாதிரியான கதைகளுக்கு நாம் ஆதரவு தர வேண்டும். கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் முதலிடத்தில் இருப்பது அன்பு சகோதரர் சசிகுமார் தான். இது மாதிரியான படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
ஒவ்வொரு காட்சியை கடந்து செல்லும்போது, அண்ணன் நீயும் விலை போயிட்டியா? என்று சொன்னது என்னை மிகவும் பாதிக்க வைத்தது. யார் இப்போது விலை போகிறார்கள், யாரிடம் விலை போகிறார்கள் என்பது தெரியவில்லை. அந்த மாதிரியான சூழ்நிலையில் இந்த மாதிரியான கருத்துக்களை சொன்ன விதம் நன்றாக இருந்தது. இன்றைக்கு நிறையபேர் ரத்ததானம், உடல் தானம் செய்யும்போது, சாதாரணமாக ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட கொடுக்க முன்வருவதில்லை என்பதை ரொம்ப ஆழமாக சொல்லி இருக்கிறீர்கள். முதலில் அவரவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும் பார்க்க வேண்டிய படம் என்றார்.























