தஞ்சாவூா்: தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளதை கண்டித்தும், மத்திய பா.ஜ.க அரசு, இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வரவேற்றுப் பேசினார். வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்  அன்பழகன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், முரசொலி, முன்னாள் எம்.பி. ராமலிங்கம் , எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை அசோக்குமார் , ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Continues below advertisement

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றியதாவது: தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக மாறி வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்க்கட்சிகள் அனைத்தும் கண்டித்துள்ளன. பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல்  சிறப்பு திருத்த பணியில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மை மக்கள். 

வாக்காளர் திருத்த தீவிரப் பணியை கண்டித்து சட்டரீதியாகவும் சந்திப்போம், மக்களை ஒன்று திரட்டியும் சந்திப்போம் என அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். முதலமைச்சர் தொடங்கிய இந்தப் போர் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான  போராகும். சிறுபான்மை மக்கள் தி.மு.க.வுக்கு ஓட்டு அளிப்பார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள் . இதனை கருத்தில் கொண்டே அந்த வாக்காளர்களை நீக்குவதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்ததே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியாகும்.

தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பொய் தகவலை  பிரதமர் கூறுகிறார் . நாட்டின் பிரதமர் இப்படி அபாண்டமாக பொய் கூறலாமா ? மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழர்களை திருடர்கள் என்கிறார். இப்படி தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய பிரதமர், மத்திய உள்துறை அமைச்சருக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே சேர்ந்து தண்டனை கொடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், மகேஷ்கிருஷ்ணசாமி, முன்னாள் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செல்வம், தணிக்கைக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், சட்ட திட்ட குழு உறுப்பினர் இறைவன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், தி.க. தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங், மாவட்ட ம.தி.மு.க செயலாளர் தமிழ்ச்செல்வன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர் ஜெயசங்கர் , மாநகர மாவட்ட செயலாளர் இடிமுரசு இலக்கணன், மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயினுல் ஆபிதீன், மக்கள் நீதி மய்யம் தர்ம சரவணன், ம.ஜ.க மாவட்ட செயலாளர் ரியாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தஞ்சை மாநகர தி.மு.க செயலாளரும், மாநகரட்சி மேயருமான சண். ராமநாதன் நன்றி கூறினார்.