தஞ்சாவூர்: தர்ம யாத்திரை செல்ல வேண்டுமானால், அறிவித்து விட்டுதான் வருவேன். கோயில் வளாகத்தில் அரசியல் பற்றி பேச வேண்டாம். அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார்.


ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தென்னிந்திய கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அவரது மகன் அகிராநந்தன் மற்றும் திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர் ஆனந்த்சாய் ஆகியோர் உடன் செல்கின்றனர். கடந்த 12-ந் தேதி பயணத்தை தொடங்கிய அவர் கேரளாவில் உள்ள கோயில்களுக்கு சென்றார். 


பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவன்கல்யாண் தஞ்சை விமானப்படை தளத்திற்கு தனி விமானத்தில் வந்தார். பின்னர் சாலை வழியாக கார் மூலம் கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலுக்கு சென்றார். அங்கு மூலவர் சன்னதி முன்பாக தரையில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் வாசிக்க செய்து தரிசனம் செய்தார். 


பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அவரை கோயில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியன், அறங்காவலர்கள் சிதம்பரநாதன், சங்கர், ராணி தனபாலன், சிவானந்தம் ஆகியோர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். இதையடுத்து கோயில் யானை மங்களத்திற்கு செவ்வாழை பழம் அளித்து ஆசி பெற்றார். பின்னர் ஆதிகும்பேஸ்வரர் சன்னதி மற்றும் மங்களாம்பிகை அம்பாள் சன்னதிகளில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தார். 


மேலும் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள கும்ப முனி எனும் அகத்தியர் ஜீவசமாதியில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். 


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக ஆதிகும்பேஸ்வரர் கோயில், அகத்தியர் ஜீவசமாதி மற்றும் அறுபடை முருகன் கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இக்கோயில்களுக்கு வர பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் கடவுள் தற்போதுதான் அனுமதி கொடுத்துள்ளார். கேரளாவில் உள்ள கோயில்களுக்கு சென்றுவிட்டு இங்கு வந்துள்ளேன். இந்த கோயிலில் உள்ள சிவன் மற்றும் அகத்தியர் ஜீவ சமாதியை தரிசனம் செய்தேன். தர்ம யாத்திரை செல்ல வேண்டுமானால், அறிவித்து விட்டு தான் வருவேன்.  கோயில் வளாகத்தில் அரசியல் பற்றி பேச வேண்டாம். எல்லாருக்கும் நல்லது நடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


பின்னர் காரில் புறப்பட்ட அவருடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆந்திரா மாணவ, மாணவிகளுடன் காரில் நின்றவாறு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் செல்பி எடுத்துக்கொண்டார். இதையடுத்து தஞ்சையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு செல்லும் அவர் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்கிறார். 


இதே போல் நேற்று ஆந்திரா மாநில சட்ட பேரவை கொறடா பி.ஜி.வி.ஆர். நாயுடு, சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் மோகன்ராவ் ஆகியோர், திங்களூர், சுவாமிமலை, திருநாகேஸ்வரம் உள்பட பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.