டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டம் டெண்டர்; திமுக அரசுக்கு தெரியாமல் போனது எப்படி? - காமராஜ் கேள்வி

காவிரி டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டம் டெண்டர் வரை போனது திமுக அரசுக்கு தெரியாமல் போனது எப்படி? திருவாரூரில் நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கேள்வி.

Continues below advertisement
கோடை வெப்பம் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் நீர்மோர் பந்தல்களை திறக்க வேண்டும் என அதிமுகவினருக்கு அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. திருவாரூரில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ் திறந்து வைத்து நீர்மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்ட பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ரூ 821 கோடி நிதி ஒதுக்கி தந்தார். ரேஷன் கார்டு விநியோகத்தில் எந்த புதிய அணுகுமுறைகள் கொண்டு வந்தாலும், ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட முடியும். ரேஷன் கார்டு விநியோகத்தில் சாத்தியம் இல்லாத திட்டங்களை அறிவிப்பதை கைவிட வேண்டும். ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்த 15 தினங்களுக்குள் கார்டு வழங்கப்படும் என்ற நடைமுறை ஏற்கனவே உள்ளது. இந்த நடைமுறையை பின்பற்றி ரேஷன் கார்டு வழங்கினாலே போதுமானது. 

 
தஞ்சை மாவட்டம் வடசேரி, கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் விடுவதென்றால் அதற்கு ஒரு ஆண்டு முன்னதாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அவ்வாறு ஓராண்டாக நடைபெற்ற நிலக்கரி எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் திமுக அரசுக்கு தெரியாமல் போனது எப்படி? காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக இருந்தபோது காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். அதன் அடிப்படையில் காவிரி டெல்டாவை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிலக்கரி எடுப்பதை தடுப்பதற்கான முயற்சிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் மேற்கொள்வார். இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜ்  தெரிவித்தார்.
Continues below advertisement
Sponsored Links by Taboola