உயிருக்கு உலை வைக்கும் சக்கரா வாய்க்கால்! அதிகாரிகளே, எப்போது தடுப்புச்சுவர் கட்டப்போகிறீர்கள்?
சிவகாமிபுரம் – வண்ணாரப்பேட்டை சாலை விளங்கி வருகிறது. இந்தச் சாலை வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

வல்லம்: தஞ்சாவூர் மாவட்டம் சிவகாமிபுரத்திலிருந்து வண்ணாரப்பேட்டை செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ள ரயில்வே கீழ்ப்பாலம் அருகே ஓடும் சக்கரா பாசன வாய்க்கால், எந்தவிதமான பாதுகாப்புத் தடுப்புச் சுவரும் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய விபத்து அபாயம் நிலவுவதால், உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய கிராமப்புற இணைப்புச் சாலைகளில் ஒன்றாக சிவகாமிபுரம் – வண்ணாரப்பேட்டை சாலை விளங்கி வருகிறது. இந்தச் சாலை வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் விவசாயப் பயன்பாட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, வண்ணாரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்களை எடுத்துச் செல்ல விவசாயிகள் இந்தச் சாலையையே பெரிதும் நம்பியுள்ளனர்.
இந்தச் சாலையில் உள்ள ரயில்வே கீழ்ப்பாலம் அருகே சக்கரா பாசன வாய்க்கால் ஓடி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்காலின் ஓரங்களில் பாதுகாப்பிற்காக தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் ஒரு பக்க தடுப்புச் சுவர் முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இதுவரை அதனை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாததால், அப்பகுதி மிகுந்த ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது.
மேலும், சாலையின் ஓரங்களில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், சாலை அகலம் குறைந்துள்ளது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது ஓரமாக ஒதுங்கும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக வாய்க்காலுக்குள் விழும் அபாயம் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த அபாயம் பல மடங்கு அதிகரிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ரயில்வே கீழ்ப்பாலம் பகுதி என்பதால் இரவு நேரங்களில் போதிய வெளிச்ச வசதி இல்லை. இதனால் சாலையின் ஓரம் எங்கு முடிகிறது, வாய்க்கால் எங்கு தொடங்குகிறது என்பது தெளிவாக தெரியாமல் போகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மட்டுமின்றி, நடந்து செல்பவர்களும் தவறி விழும் அபாயம் உள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்களும் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே இது மிகுந்த கவலைக்குரிய நிலையாக உள்ளது” என்றனர்.
மழைக்காலங்களில் நிலைமை மேலும் மோசமடைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வாய்க்காலில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதும் சிரமமாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சாலை மேம்பாட்டுப் பணிகளின் போது சாலையின் தரம் மற்றும் போக்குவரத்து வசதிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், பாதுகாப்பு அம்சங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, சாலையின் இருபுறங்களிலும் உறுதியான கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும் வகையில் ரிப்ளெக்டர்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட வேண்டும். மண் அரிப்பைத் தடுக்க கற்கள் பதித்தல் மற்றும் சிமெண்ட் கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “உயிரிழப்பு சம்பவம் ஏதும் நிகழ்ந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்னெச்சரிக்கையாக மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். போர்க்கால அடிப்படையில் தடுப்புச் சுவர் அமைத்து விபத்து அபாயத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினர். சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
Before You Go
Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
ட்ரெண்டிங் செய்திகள்






















