டாஸ்மாக் கடையை மூடுங்க... களத்தில் இறங்கி சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
சாலையில் முள்செடிகள், மரங்களை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு அருகே வடக்கூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடக்கூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் இன்று திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
வடக்கூர் பாலம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடையை திறக்கக்கூடாது எனவும், பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது எனவும், அடிக்கடி விபத்துகள் நிகழும் என்பதால் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வடக்கூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தஞ்சாவூர் - வெட்டிக்காடு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் முள்செடிகள், மரங்களை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு வட்டாட்சியர் யுவராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லம்பட்டி, கோட்டைத்தெரு, பொய்யுண்டார்கோட்டை ஆகிய மூன்று இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதனால் தினமும் பல்வேறு தகராறுகள் ஏற்படுவதும், இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதால், கோனூர் நாடு 18 கிராமங்களிலும் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என ஏற்கெனவே அந்தந்த கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றி கொடுத்திருந்தோம்.
தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி மூன்று கடைகளை மூடினோம். தற்போது வடக்கூர் பாலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்படுவதால் மீண்டும் இந்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் தகராறு ஏற்படும். எனவே இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்றனர்.
இதையடுத்து வட்டாட்சியர் தற்காலிமாக கடையை மூட உத்தரவிட்டும், நாளை ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காணப்படும் என கூறியதை அடுத்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் மறியல்
தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.6000 வழங்கக்கோரி இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் அன்புமணி, பொருளாளர் சந்திர பிரகாஷ், துணைத் தலைவர்கள் ராதிகா, மேனகா , துணை செயலாளர்கள் ராஜன் , சாமியப்பன், சரவணன், குமார், பாரதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தில் ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி கோஷங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டம் செய்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.























