தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

Continues below advertisement

சேதுபாவா சத்திரம் மீனவர் காலனி அருகே, சிஐடியு மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்,  வட்டாட்சியர் முன்னிலையில் அலுவலர்கள் ஒப்புக் கொண்டவாறு, மீனவர் காலனி சாலை, பள்ளிவாசல் சாலையை சீரமைத்து தராததைக் கண்டித்தும், கிழக்கு கடற்கரை சாலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் கழிவு நீர் தேங்கி நிற்பதை அகற்றி சுகாதாரம் பேணவும் வலியுறுத்தி, சிஐடியு மீன்பிடித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர்  பி.பெரியண்ணன், சிபிஎம் கிளைச் செயலாளர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார், சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன  உரையாற்றினர்.

Continues below advertisement

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, கிளைச் செயலாளர் நிஜாம், விவசாயிகள் சங்கம் எஸ்.ருக்கூன், பி.ரெங்கசாமி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சாலை மறியல் போராட்டத்தை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து, சேதுபாவாசத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், மனோகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், அப்பகுதி சாலைக்கு நாளைக்குள் கிராவல் அடித்து தரப்படும். ஒரு மாதத்திற்குள் தார்ச் சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர். இதையேற்று போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. 

சுப்பம்மாள் சத்திரம் மக்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சுப்பம்மாள் சத்திரம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் ஊராட்சி சுப்பம்மாள் சத்திரம் கிராம மக்கள், அடிப்படை வசதிகள் கோரி, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சுப்பம்மாள்சத்திரம் சிபிஎம் கிளைச் செயலாளர் தயார் சுல்தான், தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார், மூத்த தோழர் வீ.கருப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் சிறப்புரையாற்றினார். மூத்த தோழர் குத்புதீன், ஜமாத் தலைவர் மலையாளி, மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், தெருச்சாலைகள் அமைத்தல், கடற்கரை சாலையை சீரமைத்தல், மின்வசதி, பகுதிநேர அங்காடி, குடிமனை பட்டா, நூறுநாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சிஅலுவலரிடம் கோரிக்கை மனு அளித்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என அலுவலர்கள் உறுதியளித்தனர்.