நதிநீர் மேம்பாட்டு ஆணையத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடகா அரசு மீது, தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடுத்து, துணை ராணுவத்தை கொண்டு காவிரி நீரை திறக்க வேண்டும் என நாகையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தியுள்ளார்.

 

காவிரி தண்ணீரை தராமல் தமிழகத்தை பாழ்படுத்தும் கர்நாடகா அரசை கண்டித்து, நாகையில் அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தில், முன்னாள் அமைச்சர். ஓ.எஸ்.மணியன், தமிழ்நாடு வணிகர் பேரவை தலைவர் வெள்ளையன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், இயக்குனர் களஞ்சியம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.



 

போராட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காவிரி நீரை தராமல் காலம் தாழ்த்தும் கர்நாடக அரசு மீது அவமதிப்பு வழக்கு தமிழக அரசு தொடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், துணை ராணுவத்தை பாதுகாப்புக்கு அழைத்து, அணையை திறந்து காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாட்டில் மிகப்பெரிய கேள்விகள் எழும், நாட்டின் அமைதியின்மை ஏற்படும் மத்திய அரசும் மாநில அரசும் அதற்கு காரணமாகிவிடும் என உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

 

திருப்பூர் ஈசன் முருகசாமி கூறுகையில், ”கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை தரவில்லை என்றால் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும், விவசாய சங்கங்களையும், அரசியல் கட்சியினரையும் ஒன்றிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை அறிவிக்க உள்ளோம்” என்றார்.