தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தொழிலதிபர் நேற்று இரவு கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

Continues below advertisement


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மாத்தூர் மெயின் ரோடு பகுதியில் நகை அடகு கடை நடத்தி வந்தவர் எஸ்கேஆர். கனகராஜ் (72). மாத்தூர் அதிமுக கிளைக் கழக அவை தலைவர்.  இவர் தனது வீட்டில் அடகு கடை வைத்திருந்தார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். 


மேலும் இவரது வீட்டிற்கு அருகில் பெட்ரோல் பங்க் ஒன்றும் நடத்தி வருகிறார். வழக்கம்போல் கனகராஜ் நேற்ற இரவு தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து இருந்தார் அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சற்றும் எதிர்பாராதவிதமாக கத்தியை எடுத்து கனகராஜ் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். 


இதில் படுகாயம் அடைந்த கனகராஜ் அலறிக் கொண்டே அதே இடத்தில் கீழே ரத்தவெள்ளத்தில் விழுந்து துடிதுடித்து இறந்தார். கனகராஜின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார் கோயில் போலீசார் கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் நாச்சியார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த அந்த நபர் யார்? முன்விரோதம் காரணமா? அல்லது அரசியல் உட் கட்சி பிரச்சனையா, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜு தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சம்பவ இடத்தை தஞ்சை மாவட்ட எஸ்பி ராஜாராம் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.