தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே யாகப்பாசாவடி பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் நேருக்கு நேர் மோதியதில் பைக்கில் வந்த தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து பலியான தொழிலதிபரின் உறவினர்களும், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களும் திடீர் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் தென்னமநாடு பகுதியை சேர்ந்த சந்திரஹாசன் என்பவரின் மகன் கதிர்வேல் (50). டிராக்டர் ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர். இவர் நேற்று மதியம் தென்னமநாட்டில் இருந்து வேலை காரணமாக தஞ்சாவூருக்கு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். தஞ்சாவூர் அருகே யாகப்பாச்சாவடி பகுதியில் சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் வரும் வாகனங்கள் வேகத்தை குறைத்து ஒரேவழியில் சென்று வருகின்றன. இந்நிலையில் கதிர்வேல் சாலைப்பணிகள் நடந்து யாகப்பா சாவடி அருகில் தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. யாகப்பா சாவடி அருகில் அந்த தனியார் பஸ் அதிக வேகமாக சென்று எதிரே வந்த கதிர்வேல் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கதிர்வேல் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சின் டிரைவர் பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இந்த விபத்து குறித்து அறிந்த கதிர்வேல் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் ஆத்திரமடைந்து தனியார் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சாலைமறியலில் ஈடுபட்டனர். கதிர்வேலுவின் உறவினர்களுடன் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களும் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒன்றரை மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டிஎஸ்பி சோமசுந்தரம் மற்றும் தாலுகா போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னர் போலீசார் கதிர்வேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், பட்டுக்கோட்டைக்கு செல்லும் தனியார் பஸ்கள் அதிக வேகத்துடன் இயக்கப்படுகிறது. மற்ற பஸ்களை முந்தி சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று டிரைவர்கள் கண்மண் தெரியாமல் பஸ்சை இயக்குகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் ஹாரனை ஒலிக்க விட்டுக் கொண்டே செல்கின்றனர். இதில் திடுக்கிடும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். முறைப்படி வாகனங்களை இயக்காமல் அதிவேகத்தில் இயக்கி விபத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.