தஞ்சாவூர்: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான சிறுவர்கள் கோடை விடுமுறையை மொபைல் போன்களிலும், கணினி விளையாட்டுகளிலும் முடங்கிப் போய்க் கழித்து வரும் வேளையில், தஞ்சாவூர் அருகே நத்தமாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது விடுமுறை நாட்களைப் பாரம்பரியமிக்க கிராமத்து சாகசங்களோடு கொண்டாடி வருவது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தஞ்சாவூர் அருகே நத்தமாடிப்பட்டி கிராமத்தில் கல்லணைக்கால்வாய் ஆற்றுப் பகுதியில் கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் வலை வீசி மீன் பிடித்து வருவது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நகர்ப்புற மாணவர்கள் கணினி விளையாட்டுகள் மற்றும் செல்போன்களில் மூழ்கி இருக்கின்றனர். ஆனால் கிராமப்புற மாணவர்கள் இயற்கையோடு இணைந்து தங்கள் விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிள் ஓட்டி பழகுவது, கிட்டிப்புல் விளையாடுவது என்று செல்போன்களை ஓரம்கட்டி உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் அளிக்கும் விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் அருகே நத்தமாடிப்பட்டி பகுதியில் ஓடும் கல்லணைக்கால்வாய் பகுதியில் தற்போது குறைந்த அளவே தண்ணீர் ஓடுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் சிலர் சேர்ந்து உற்சாகமாக மீன் பிடித்தனர். பொதுவாக மீன் பிடிப்பது என்பது ஒரு கலை. பெரியவர்களுக்கு இணையாக இந்த பள்ளி மாணவர்கள் வலையை வீசி மீன் பிடித்தது அந்த வழியாக சென்ற மக்களின் கவனத்தை ஈர்த்தது. மிகவும் லாவகமாக அந்த மாணவர்கள் வலை பெரியவர்கள் வீசுவது போன்று வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
ஆற்றில் நீர் வரத்து குறைவாக உள்ள இடங்களைத் தேர்வு செய்து, அங்கு குழுவாகச் சேர்ந்து மீன் பிடிக்கின்றனர். இவர்களின் வலையில் ஜிலேபி, கெண்டை, கெழுத்தி, விறால், குறவை உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்குகிறது. இதுகுறித்து அந்த மாணவர்கள் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களாக மழை பெய்வதால் கோடை வெயில் அதிகம் இல்லை. வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதை விட, நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் மீன் பிடிப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இது ஒரு பொழுதுபோக்காக மட்டுமின்றி, எங்களுக்குப் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. வலை வீசி கிடைக்கும் மீன்களை அனைவரும் சரிசமமாக எடுத்துக் கொள்வோம். இது எங்களுக்கு உடற்பயிற்சி போன்றும் அமைகிறது என்று தெரிவித்தனர்.
கிராமப்புறங்களில் மீன்பிடி திருவிழா இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஏரிகளில் தண்ணீர் குறைவாக உள்ளபோது மீன்களை வெறும் கைகளாலும், சிறிய அளவிலான குச்சிகளை கொண்டும் மீன்களை பிடிப்பதுதான் மீன்பிடி திருவிழா. அதுபோன்று விடுமுறை காலத்தை இது போன்ற பாரம்பரிய பொழுதுபோக்குகளுடன் மாணவர்கள் கழிப்பது, கிராமப்புற வாழ்வியலைத் தற்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
மீன் பிடித்தல் என்பது சிறந்த உடற்பயிற்சியாகவும், மன அழுத்தத்தைக் குறைக்கும் பொழுதுபோக்காகவும் செயல்படுகிறது. இது உடலின் தசைகளை வலுவாக்குகிறது. இயற்கையான வைட்டமின்-D அளவை அதிகரிக்கிறது, மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மீன் தூண்டிலைப் பிடிப்பதும், அதை இழுப்பதும் கைகள், தோள்கள் மற்றும் முதுகுத் தசைகளுக்கு நல்ல பயிற்சியளிக்கிறது.மூட்டுகள் மற்றும் கால்கள்: தண்ணீரில் நடப்பது சிறந்த கார்டியோவாஸ்குலர் பயிற்சியாகும். திறந்த வெளியில் சூரிய ஒளியில் இருப்பதால், உடலுக்குத் தேவையான வைட்டமின் D இயற்கையாகவே கிடைக்கிறது. இது எலும்புகளை வலிமையாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றியும், உடலுக்கு தேவையான பயிற்சியையும் அளிக்கும் விதத்தில் மாணவர்கள் மீன்பிடிப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
