திருச்சியில் பிரமாண்டமாக தொடங்கிய புத்தக கண்காட்சி... வரும் 22ம் தேதி வரை நடக்கிறது
தற்போதுள்ள தலைமுறையினா் செல்போன் உபயோகத்தைத் தவிர்த்து வாசிப்புத் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

தஞ்சாவூர்: திருச்சியில் தமிழக அரசின் சார்பில் பபாசியுடன் இணைந்து நடத்தப்படும் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. தினமும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் போன்றவை நடக்கிறது.
திருச்சி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) ஆகியவை இணைந்து 4ஆவது ஆண்டாக 11 நாட்கள் புத்தகக் கண்காட்சியை மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள செயிண்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கி உள்ளது. இந்த புத்தக கண்காட்சியை தொடக்கி வைத்து அமைச்சா் கே.என். நேரு பேசியதாவது:

மறைந்த திமுக தலைவா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டது. புத்தகம் அச்சிடுவோர் புத்தக கண்காட்சி நடத்திட பொருளாதார நெருக்கடி இருப்பதாகக் கூறியபோது, கருணாநிதி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக வழங்கினார். சென்னையில் புத்தகக் கண்காட்சியை நடத்த உதவினார். தற்போது ஆட்சியை திறம்பட நடத்தி வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னை மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்திட உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: 2021ம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற புத்தக திருவிழாவை தமிழக அரசு நடத்தி வருகிறது. தற்போதுள்ள தலைமுறையினா் செல்போன் உபயோகத்தைத் தவிர்த்து வாசிப்புத் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இதுபோன்ற புத்தகக்கண்காட்சிகள் வாசிப்புத்திறனை உயர்த்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடா்ந்து, அமைச்சா்கள் இருவரும் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டனா்.
விழாவில் திருச்சி கலெக்டர் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமார், ந. தியாகராஜன், மாவட்ட நூலக அலுவலா் சரவணக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.
செயிண்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சுமார் 5 ஏக்கரில் இந்த புத்தகக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 130 புத்தக அரங்குகளும், 100-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்களின் புத்தகங்களும் அனைத்து வகையான வாசகா்களையும் கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
வரும் 22ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும். உணவு அரங்குகள் மற்றும் குடிநீா், கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் என தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு புத்தகங்களும் கண்காட்சியில் இடம் பிடித்துள்ளது.
நாள்தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பள்ளி மாணவ மாணவிகளைக் கவா்ந்திடும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு மேல் தமிழகத்தின் தலை சிறந்த சிந்தனையாளா்களின் கருத்தரங்கு, குதூகலம் தரும் கோமாளி, கதைகளோடு விளையாடு, பொம்மை சொல்லும் கதை, விளையாட்டே கொண்டாட்டம், பலூன் சிற்பங்கள், அறிவியல் மாயங்கள், நல்ல சினிமா பார்ப்போம், பாடி மகிழ்வோம், பறவைகளும் நம் நண்பா்கள், கதை கதையாம் காரணமாம் உள்ளிட்ட தலைப்புகளில் தினமும் இளையவா் அரங்கமும் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பூா்வமான விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் அறிவியல் அரங்கம் மற்றும் அறிஞா்கள் மற்றும் எழுத்தாளா்களை பாராட்டி சிறப்பிக்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. புத்தக கண்காட்சிக்கு அனுமதி இலவசம். அனைத்து தரப்பு மக்களும் இதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.






















