தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அலவந்திபுரத்தில் எச்ஐவி குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் வெங்கடேஸ்வரா கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை தொடர்பு பணியாளர் திட்டத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே அலவந்திபுரத்தில் எச்ஐவி குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்தில் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமலும், ஒதுக்காமலும், சக மனிதர்களை போன்று அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு எச்ஐவி நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் திட்ட இயக்குனர் டாக்டர் பாஸ்கர், மாவட்ட வளர்ச்சி அலுவலர் கதிரேசன், ஐசிடிசி ஆலோசகர் உமா மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், கிராம சுகாதார செவிலியர் விஜயா மற்றும் பாரத மாதா கல்வி குழுவின் துணைத்தலைவர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் செல்வகணேஷ், மக்கள் நல பணியாளர் மாலதி, பணி தள பொறுப்பாளர் பிரபா, மகளிர் சுய உதவிக்குழு தலைவி கீதா செந்தாமரை பானுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் எச்.ஐ.வி. நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.