75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு விழா மயிலாடுதுறையில் உள்ள பொது சுகாதாரம் துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துமனையில் சிறப்பாக பணியற்றிய மருத்துவர், சுகாதார ஆய்வாளர், கண் மருத்துவ உதவியாளர், கிராம மருத்துவ செவிழியர் மற்றும் பல்நோக்கு உதவி பணியாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர்க்கு துணை இயக்குனர் குமரகுருபரன் பாராட்டி நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
பழையார் மீனவர் கிராமத்தில் தொடரும் சோகம்!
பழையாறு முகத்துவாரத்தில் இரண்டு விசை படகுகள் கவிழ்ந்து சேதம், இரண்டாவது நாளாக மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் துறைமுகத்தில் இருந்து செழியன், சுரேந்தர் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகில் நேற்று முன்தினம் அதிகாலை ஒவ்வொரு படகிலும் 5 பேர் வீதம் இரண்டு படகுகளிலும் 10 பேர் துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று மீண்டும் நேற்று காலை பழையார் துறைமுகத்தை நோக்கி திரும்பி வரும்போது, கொள்ளிடம் ஆறு கடலில் சங்கமிக்கும் இடமான முகத்துவாரத்தின் வழியே படகு செல்கையில் முகத்துவாரத்தில் இருந்த மணல் மேட்டில் மணல் குவியலில் மோதிய இரண்டு படகுகளும் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களை அருகில் இருந்த சக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். தொடர்ந்து மற்ற மீனவர்களின் விசை படகுகள் உதவியுடன் கடலில் மூழ்கிய படகை மூன்று விசை படகுகள் மூலம் மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் செழியன் விசைப்படகு முற்றிலும் கடலில் மூழ்கி சேதம் அடைந்த நிலையில் சுரேந்தர் என்பவரது படகை மீட்டு மீனவர்கள் கரை சேர்த்தனர். மேலும், கடலில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்த செழியனுக்கு சொந்தமான விசைப்படகை தொடர்ந்து மீனவர்கள் இரண்டாவது நாளாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் இதுவரை மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட எந்த ஒரு அதிகாரிகளும் இதுவரை இங்கு வரவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
மேலும், பழையார் துறைமுகத்திலிருந்து தினந்தோறும் கடலுக்குள் 350 விசை படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டு படகுகள் மூலம் மீன் பிடிக்க செல்லும் 5000 மீனவர்கள் இதனால் இரண்டு நாட்களாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. பழையார் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலையில் ஈடுபடவில்லை. இதுகுறித்து பழையார் கிராம மீனவர்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் அதிகளவு தண்ணீரால் பழையார் அருகே ஆறு கடலில் கலக்கும் இடமான முகத்துவாரம் தூர்ந்து மண் மேடாகி உள்ளது.
இதனால் ஒவ்வொரு முறையும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே பழையார் துறைமுகம் அருகே கடலில் கலக்கின்றபோது முகத்துவாரத்தில் மண்மேடாகி விடுவதால் படகுகள் கடலுக்குள் செல்லும்போது மண் மேட்டில் மோதி கவிழ்ந்து விடுகிறது. ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று படகுகள் வீதம் இதனால் உடைந்து சேதம் அடைந்து விடுகிறது. எனவே தற்பொழுது சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கவும், பழையார் முகத்துவாரத்தை தூர்வாரி ஆழ்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.