தஞ்சாவூர்: செம அறிவிப்பு வெளியாக உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா? திருச்சி பஞ்சப்பூரில் தயாராகி வரும் புதிய ஆம்னி பேருந்து முனையம் விரைவில் திறக்கப்பட உள்ளது என்ற தகவல்தான் அது.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் தயாராகி வரும் ஆம்னி பேருந்து முனையம் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்து விரைவில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கு தகுந்தார்போல் பணிகளும் வெகு வேகமாக நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சி அருகே பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்து முனையம் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பேருந்து முனையம், திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில், ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு (IBT) அருகில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் கடந்த நவம்பர் 2024 இல் தொடங்கின. இந்த திட்டத்திற்காக மொத்தம் ரூ.17.60 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதில், மாநில அரசின் மூலதன மானிய நிதியிலிருந்து ரூ.8.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை திருச்சி மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து செலவிடப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "பேருந்து முனையத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முக்கிய சிவில் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. சிறிய அளவிலான வேலைகளும், வெளிப்புற வேலைகளும் மட்டுமே முடிக்கப்பட வேண்டும். வரும் ஜனவரி 2026க்குள் இந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தனர்.
இந்த புதிய பேருந்து முனையத்தில் இரண்டு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 82 பேருந்துகள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. 45 பேருந்துகள் குறுகிய தூர பேருந்துகளுக்காகவும், 37 பேருந்துகள் நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 80 பேருந்துகள் திருச்சி வழியாக இயக்கப்படுகின்றன. மேலும், சுமார் 800 பேருந்துகள் திருச்சி வழியாக பயணிக்கின்றன. இந்த புதிய முனையம் திறக்கப்பட்டால், பேருந்து போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சியில் முன்பு ஆம்னி பேருந்துகள் பல்வேறு இடங்களில் சாலையோரம் நிறுத்தப்பட்டு வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். ஆம்னி பேருந்துகள் சாலை ஓரங்களில் குறிப்பாக மேஜர் சரவணன் சாலை, ராக்ஸ் சாலை மற்றும் மத்திய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தப்பட்டு வந்தன. இதனால் குறிப்பாக மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
இதைத் தவிர்க்கும் வகையில் ஆம்னி பேருந்துகள் தற்போது ஐபிடி அருகே தற்காலிகமாக நீண்ட கால பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. இனிமேல், மத்திய பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புதிய பேருந்து முனையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற தேவைகள் குறித்து விவாதிக்க, மாநகராட்சி நிர்வாகம் விரைவில் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பிற சம்பந்தப்பட்டவர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த புதிய பேருந்து முனையம், திருச்சி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, பயணிகளுக்கு ஒரு சிறந்த வசதியையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி 2026ல் இது திறக்கப்படும்போது, திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகும் என்ற எதிர்ப்பார்ப்பும், மகிழ்ச்சியும் எழுந்துள்ளது.
இந்த புதிய பேருந்து முனையம், திருச்சி நகரின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு, நகரின் அழகையும் இது அதிகரிக்கும். மேலும் பல இடங்களில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் அலைந்து வந்ததும் தற்போது முற்றிலும் தவிர்க்கப்படும். இதனால் ஒரே இடத்தில் பயணிகள் தாங்கள் தொலைதூரம் செல்லும் இடங்களுக்கான பேருந்துகளில் ஏறுவதற்கான வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் சிரமத்தை குறைத்து விடும்.