எம்புட்டு நீளம்... மக்களை பதறடித்த 8 அடி நீள ஆண்முதலை... தஞ்சை அருகே பரபரப்பு
தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள வயல்வெளியில் முதலை ஒன்று தென்பட்டுள்ளது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

தஞ்சாவூர்: யேய் யாருப்பா நீ... இம்புட்டு நீளமாக இருக்கே... என்று விவசாயிகளை பதறியடித்து கொண்டு ஓட செய்துள்ளது 8 அடி நீள முதலை. வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் சேர்ந்து பிடிச்சு மக்களை ஆசுவாசப்படுத்தி இருக்காங்க.
தஞ்சை அருகே ரெட்டிபாளையம் வயல்வெளியில் முதலை தென்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த தஞ்சாவூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் முதலையை பத்திரமாக பிடித்து கும்பகோணம் அணைக்கரை பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள வயல்வெளியில் முதலை ஒன்று தென்பட்டுள்ளது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் வயல் பகுதியில் முதலை தென்பட்டதால் விவசாயத் தொழிலாளர்களும் அச்சமடைந்தனர். உடன் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி உத்தரவின் பேரில் தஞ்சை வனச்சரகர் ஜோதி குமார், திருவாரூர் வனச்சரகர் ரஞ்சித் குமார், வனவர் இளையராஜன் மற்றும் வனப் பணியாளர்கள் குழுவினர் , தஞ்சை மண்டல தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பொய்யாமொழி , இடபிள்யுஇடி அமைப்பு நிறுவனர் சதீஷ்குமார் ராஜேந்திரன், சரவணன், லோகநாதன், அன்பு, நித்திஷ் நேத்ரன், முத்துப்பாண்டி, அலெக்ஸ் , ஆர்.சி.ஏ நிறுவனர் கணேஷ் முத்தையா ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் முதலையை தேடும் பணி நடந்தது. அப்போது ரெட்டிப்பாளையம் பகுதியில் வயலுக்கு செல்லும் சிறிய குழாய் வாய்க்காலில் முதலை இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்று பார்த்தபோது சுமார் 8 அடி நீளம் உள்ள முதலை இருந்ததை உறுதி செய்தனர். பின்னர் உரிய பாதுகாப்புடன் அந்த முதலையை பிடித்து வன அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அந்த முதலையை மருத்துவ பரிசோதனை செய்ததில் அது ஆண் முதலை என்றும், ஆரோக்கியமாக இருப்பதும் தெரிய வந்தது. வெண்ணாற்று பகுதி நீர் நிலைகளில் இருந்து இயற்கையாக இடம் பெயர்ந்து இந்த முதலை ரெட்டிப்பாளையம் பகுதிக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பிடிக்கப்பட்ட முதலை பத்திரமாக கும்பகோணம் அணைக்கரையில் முதலை பாதுகாப்பு பகுதியில் விடப்பட்டது. இதையடுத்து முதலையை இரவோடு இரவாக விரைந்து வந்து பிடித்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.





















