தஞ்சாவூர்: ஒட்டும் இல்லை உறவும் இல்லை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிய பழனிசாமி தற்போது மாற்றி மாற்றி பொய் பேசுவது எதற்காக தெரியுங்களா? மத்திய அரசை கண்டு பயந்துதான் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
தஞ்சாவூருக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூருக்கு வந்த பொழுது நேற்று இங்கே ஒரு குறுநில மன்னர் வந்ததாக கேள்விப்பட்டோம். எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி குறித்து மாற்றி மாற்றி பொய் பேசி வருகிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் முடிவு எடுத்து விட்டோம் பாஜகவுடன் இனி எவ்வித கூட்டணியும் கிடையாது. இனிமேல் இது குறித்து எவ்வித கேள்வியும் கேட்க வேண்டாம். அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் எவ்வித உறவும் கிடையாது என்று தெரிவித்தார்.
ஆனால் நேற்று தஞ்சாவூருக்கு வந்துவிட்டு செல்லும்போது ஒருமித்த கருத்துகளை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி என்று தெரிவித்தார். அப்போது நிருபர்கள் பாஜகவுடன் கூட்டணி இருக்குமா என்று கேட்டபோது ஒருமித்த கருத்துகளைக் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தான் கூட்டணி வைக்கப்படும் என்று தெரிவித்தார். ஒட்டும் இல்லை உறவும் இல்லை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியவர் தற்போது இவ்வாறு மாற்றி மாற்றி பொய் பேசுகிறார்.
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அவர்கள் இருவரும் பாஜகவுடன் கூட்டணி வேணாம் என்று சொல்லக் கூறுங்கள் பார்ப்போம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதற்கும் உதவாதவர். அவர் ஏதோ சொல்லிவிட்டு போகிறார். உங்களுடன் கூட்டணி கட்சி வைத்துக் கொள்ள யார் வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியை அரசியல் கட்சி தலைவராகவே நடிகர் விஜய் கருதவில்லை. அதனால்தான் அவர் தன் கட்சி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பற்றி எதுவும் பேசவில்லை. பழனிசாமியை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
இவரை தேடி எந்த கட்சிக் கூட்டணிக்கு வரும். தஞ்சை மண்டலத்தில் மொத்தம் 34 எம்எல்ஏக்கள் நீங்கள் எவ்வளவு ஜெயித்தீர்கள் நான்கு பேர். 30 வைத்திலிங்கம் உங்களுடன் இல்லை. அப்படி பார்த்தால் மூன்று எம்எல்ஏக்கள் மட்டுமே. திருச்சியில் 10 இடங்களில் நின்று பத்து இடத்திலுமே தோல்வி. முதல்வர் ஸ்டாலின் அவரது கடமையை செய்து திட்டங்களை துவக்கி வைத்தாலே போதும். எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்லும் அவசியமே இல்லை. இவருக்கு பதில் சொல்ல நேரம் ஒதுக்குவது தேவையில்லாத ஒன்று.
முன்பு ராஜாக்கள் காலத்தில் அஞ்சரை என்று சிலரை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அவர்களுக்கு ஆறறிவு கிடையாது என்று ஒதுக்கி வைத்து விடுவார்களாம். அதுபோல் அஞ்சரைக்கு எல்லாம் முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லிக் கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று.
எடப்பாடி பழனிசாமிக்கு தமிழே சரியாக பேச வருவதில்லை. முதலில் தமிழில் நன்றாக பேச கற்றுக் கொள்ளுங்கள். தஞ்சை மண்டலத்திற்கு 4 ஆண்டு ஆட்சி காலத்தில் என்ன செய்தீர்கள். கஜா புயலின் போது முதல்வராக இருந்தபோது பழனிசாமி தஞ்சாவூர் மண்ணுக்கே வரவில்லை. எத்தனை லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்து விவசாயிகள் கதறி அழுதனர். பல்வேறு தரப்பினரும் பல உதவிகள் செய்தனர். ஆனால் பழனிசாமி தஞ்சை பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை.
சின்னம்மா காலில் விழுந்து ஆட்சிக்கு வந்த நீங்கள் எத்தனை துறைகளை வைத்திருந்தீர்கள். பல துறைகளை நீங்கள் வைத்திருந்தீர்களே. அப்பொழுது உங்கள் அமைச்சர்களுக்கு துறைகளைப் பிரித்துக் கொடுத்திருக்கலாமே. நீங்கள் உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசுகிறீர்கள். விஜய் காலில் விழுந்து விடலாமா கூட்டணி கிடைக்குமா என்று நினைக்கிறார் பழனிசாமி. பிரேமலதா தற்பொழுது கூட்டணிக்கு தயாராக இருக்கிறார். நியாயமாக அவருக்கு ஒரு ராஜ்ய சபா சீட் தர வேண்டும்.
இறந்த விஜயகாந்த் அனுதாப அலையில் தான் 20% ஓட்டுகள் கிடைத்தது என்று நான் திட்டவட்டமாக கூறுவேன். இதை மறுப்பதற்கு பழனிசாமியும், பிரேமலதாவும் தயாரா ? விருதுநகரில் தான் விஜய பிரபாகர் வாக்கு எண்ணிக்கை சரி போட்டியாக சென்றது.
இந்த நிலை அதிமுகவிற்கு இல்லையே ஏன்? டெபாசிட் போனது குறைந்த ஓட்டுகள் கிடைத்தது ஏன்? பாஜகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக செய்திகள் வருகிறது. ஊழல்வாதி என்று அம்மாவை சீமான் கூறுகிறார் அவருக்கு பழனிசாமி ஏன் பதில் கூறுவதில்லை. அவர்கள் அம்மாவை பற்றிதிட்டினாலும் பரவாயில்லை. தலைவரைப் பற்றி திட்டினாலும் பரவாயில்லை என கண்டு கொள்வதில்லை. யார் காலில் விழுந்து கூட்டணி வைக்கலாம் என்ற நினைப்புதான் உள்ளது.
திமுக அரசு ஊழல் செய்துள்ளது என்று பழனிசாமி பேச மாட்டார். திமுக அரசு மீது ஊழல் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது, இருந்தாலும் ஊழல் குறித்த குற்றச்சாட்டு பற்றி பழனிசாமி பேச மாட்டார். மத்திய அரசை கண்டு பயப்பட ஆரம்பித்த எதிரொலி தான் கூட்டணி பற்றி பழனிசாமி பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதற்கான தான் இதை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.