தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் இளமதி சுப்பிரமணியன் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இளமதி சுப்பிரமணியன் மயங்கி விழுந்ததை அறிந்த அமைச்சர் கோவி.செழியன் நேரில் சந்தித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் கடந்த 30ம் தேதி முதல் பெறப்பட்டு வந்தது.
கடந்த 6ம் தேதி மதியம் 3 மணியுடன் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவடைந்தன. முக்கிய கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். பின்னர் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. பின்னர் இன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். இதற்கிடையில் அந்தந்த கட்சி வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தில் வெகுவாக மும்முரம் காட்டி வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும் பாராமல் வேட்பாளர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தாதேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், இன்று ஆடுதுறை பகுதியில் தொடங்கி வண்ணக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமானதால் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது பிரச்சார வாகனத்தில் வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் மயங்கி கீழே விழுந்தார்.
உடன் அவரை ஆடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கட்சியினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்களின் பெண் வேட்பாளர் மயங்கி விழுந்ததால் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சரும், திருவிடைமருதூர் தொகுதி திமுக வேட்பாளருமான கோவி.செழியன் பெண் வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் மயக்கமடைந்து சிகிச்சையில் இருப்பதை அறிந்தார். உடன் தனது பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு தனியார் மருத்துவமனைக்கு நேரில் விரைந்து சென்றார். பின்னர் இளமதி சுப்பிரமணியனை சந்தித்து பேசினார். பின்னர் மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தன்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளராக இருந்தாலும் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று உடல்நிலை குறித்து அமைச்சர் கோவி.செழியன் விசாரித்தது மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
