தஞ்சாவூர்: தஞ்சையில் வேளாண் விழிப்புணர்வு கண்காட்சி, கருத்தரங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இதில் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சை தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வோளண்மை உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இந்த கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தஞ்சை தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவு மேலாண்மை நிறுவனத்தில் இயற்கை வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் இயற்கை வேளாண் மதிப்பு கூட்டிய உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சார்பில் 20 அரங்குக்ள அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் நிப்டெம் இயக்குனர் பழனிமுத்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, துணை இயக்குனர்கள் அய்யம்பெருமாள் (உழவர் பயிற்சி நிலையம்), மாலதி (மத்திய திட்டம்), சாருமதி (மாநில திட்டம்), சுஜாதா (விதை ஆய்வு), கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாஸ்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாமுவேல், வேளாண்மை உதவி இயக்குனர்கள் கோபாலகிருஷ்ணன், சிவவீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

வேளாண்மைத் துறை, தரமான விதைகள், உரம், மற்றும் பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு விநியோகித்தல், நவீன வேளாண் தொழில்நுட்பங்களைப் பயிற்றுவித்தல், மண் பரிசோதனை செய்தல், நுண்ணீர் பாசனம் ஊக்குவித்தல், மற்றும் பயிர் காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கிறது. மேலும், இந்தத் துறை வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய விவசாய முறைகள், வீரிய ரக விதைகள், மற்றும் பண்ணை இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்துதல் போன்றவற்றையும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தரமான விதைகள், உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லிகளை மானிய விலையில் விநியோகித்தல், மண் பரிசோதனை ஆய்வகங்கள் மூலம் மண் வளத்தைப் பரிசோதித்தல் மற்றும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க ஆலோசனைகளை வழங்குதல், நவீன விவசாயக் கருவிகளை மானிய விலையில் வழங்கி, விவசாய பணிகளை எளிதாக்குதல், இயற்கை விவசாயம், நீடித்த நிலையான விவசாயம், மற்றும் மானாவாரி பயிர் சாகுபடியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற வேளாண் கண்காட்சிகள், கருத்தரங்கம் ஆகியவற்றையும் நடத்தி விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் சாகுபடி பொருட்களை எவ்வாறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி பொருளாதாரத்தை உயர்ததி கொள்ளலாம் என்பதும் குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண் துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.