அடையாளம் காட்டிய அப்பா, அம்மா... வித்தியாசமான முறையில் திருமண பத்திரிகையில் அச்சடித்த வாலிபர்
பெயர் இல்லை எனில் ரகளையே ஏற்படும். அதுவும் கிராமப்புறங்களில் பத்திரிகையில் பெயர் இல்லை எனில் அவ்வளவுதான்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வித்தியாசமான முறையில் உறவுகளை பெருமைப்படுத்தி அச்சடிக்கப்பட்ட திருமண பத்திரிகை அனைவரையும் கவர்ந்து வருகிறது. எவ்விதமான ஈகோவும் ஏற்படாத வகையில் அட்டகாசமான முறையல் கீழ உளூரை சேர்ந்த வாலிபர் ஆர்.தினேஷ் தனது திருமண பத்திரிகையில் இவ்வாறு செய்து அசத்தி உ;ள்ளார்.
திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். முக்கியமாக திருமண பத்திரிகையில் தங்களின் பெயர் இடம்பெற வேண்டும் என்பதில் உறவினர்கள் முக்கியம் காட்டுவார்கள். பெயர் இல்லை எனில் ரகளையே ஏற்படும். அதுவும் கிராமப்புறங்களில் பத்திரிகையில் பெயர் இல்லை எனில் அவ்வளவுதான். விஞ்ஞான வளர்ச்சி உச்சக்கட்டத்தில் உள்ள இன்றைய காலக்கட்டத்தில் திருமணப் பத்திரிகையில் பெயர் விடுபடுவது உறவுகளுக்கு இடையே கடுமையான அதிருப்தி, ஈகோ சண்டைகள் மற்றும் நிரந்தரப் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. தாத்தா, பாட்டி அல்லது முக்கிய உறவினர்களின் பெயர் விடுபடுவது, அவர்கள் குடும்பத்தில் புறக்கணிக்கப்படுவதாகக் கருதி பெரிய சண்டையை உண்டாக்கும்.

திருமண பத்திரிகை, காது குத்துதல் உட்பட விசேஷங்களுக்காக அச்சடிக்கப்படும் பத்திரிகையில் பெயர் இல்லாவிட்டால் இது தங்களை அவமதிப்பதாகக் கருதி குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் இடையே மனக்கசப்பு, வாக்குவாதம் மற்றும் படுகாயமடையும் அளவு மோதல் சம்பவங்களும் நடந்துள்ளன. நடந்தும் வருகின்றன.
இரு வீட்டாரில் யாருடைய உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதில் பெயர் போடுவதை வைத்து சண்டை வரும். பெயர் விடுபட்ட உறவினர்கள் திருமணத்திற்கு வராமல் தவிர்ப்பது மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நிரந்தரமான உறவு முறிவை ஏற்படுத்திக் கொள்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு தகராறு செய்யும் உறவுகளை அட்டகாசமாக சமாளிக்கும் வகையில் பெயரே இல்லாமல் தஞ்சாவூர் மாவட்டம் கீழ உளூரை சேர்ந்த வாலிபர் தினேஷ் என்பவர் திருமண பத்திரிகையில் எதுகை மோனையில் வரிசைப்படுத்தி உள்ளார். தினேஷ்க்கும் –அபிராமி சுந்தரி என்ற பெண்ணிற்கும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் வரும் 20ம் தேதி திருமணம் நடக்க உள்ளது.
இதற்காக அச்சடிக்கப்பட்ட பத்திரிகையில் நல்வழிகாட்டிய தாத்தா, பாட்டி, அடையாளம் காட்டிய அம்மா, அப்பா, அறம் காட்டிய ஆசான்கள், அன்புகாட்டிய பெரியப்பா, பெரியம்மா, சிந்திக்க வைக்கும் சித்தப்பா, சித்திகள், மதிப்பிற்குரிய மாமாக்கள், அத்தைகள், மனம் நிறைந்த மாப்பிள்ளைகள், அத்தான்கள், அக்கறைக் கொள்ளும் அண்ணன்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கைகள், நெஞ்சம் நிறைந்த நண்பர்கள், முத்துக்கு முத்தான வாண்டுகள் என்று அடுக்கு மொழியில் என்று உறவினர்களின் பெயர்கள் இல்லாமல் அவர்களின் உறவு முறையை புகழ்ந்து கூறி வித்தியாசமான முறையில் குறிப்பிட்டுள்ளார்.. இந்த பத்திரிகை பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.























