தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உரிமை கோரப்படாத 11 உடல்களுக்கு போலீஸார் தகுந்த இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மார்சுவரியில் இருந்த 11 பேரின் உடல்களை காவல்துறையினர் நல்லடக்கம் செய்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்

Continues below advertisement

உறவினர்கள் யாரும் வராதபோதும், மனிதநேயம் கைவிடப்படவில்லை என்பதை போலீசார் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். காவல்துறை உங்களின் நண்பன் என்பதை மீண்டும், மீண்டும் உரக்க தெரிவிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் நீண்ட நாட்களாக யாரும் உரிமை கோராமல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 11 பேரின் உடல்களுக்கு காவல்துறையினர் இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்த சம்பவம், மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசாரின் கடமை என்ற நிலையை தாண்டி மனிதாபிமானம் என்ற செயலை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மருத்துவக் கல்லூரி காவல் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 10 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 11 பேரின் உடல்கள், சட்ட நடைமுறைகளின்படி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இவர்களின் உறவினர்களைக் கண்டறிய காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். வழக்கமான நடைமுறைகளின்படி தகவல்கள் வெளியிடப்பட்டு, தேவையான விசாரணைகளும் நடத்தப்பட்டன. இருப்பினும், நீண்ட நாட்கள் கடந்தும் யாரும் அந்த உடல்களை உரிமை கோரி வராததால், சட்ட விதிமுறைகளுக்கு இணங்க இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள காவல்துறை முடிவு செய்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் உத்தரவின்படி, அந்த 11 உடல்களும் மரியாதையுடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு, தஞ்சாவூர் வடக்குவாசல் ராஜகோரி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு அனைத்து மதங்களின் மரபுகளுக்கும், மனிதநேயத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் ஒவ்வொரு உடலும் உரிய முறையில் குழிகளில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கப் பணிகள் நிறைவடைந்த பின்னர், தஞ்சாவூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) இளங்கோ ஜென்னிங்ஸ் தலைமையில் காவல்துறையினர், நல்லடக்கம் செய்யப்பட்ட இடங்களில் மலர் மாலைகள் வைத்து, பூக்கள் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். உறவுகள் யாரும் இல்லாத நிலையில், காவல்துறையினரே இறுதி வழியனுப்பை மேற்கொண்ட இந்த நிகழ்வு மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

இந்த நிகழ்வில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் வி. சந்திரா உள்ளிட்ட காவல்துறையினர், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளும் கலந்து கொண்டு மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

சமூகத்தில் அடையாளம் தெரியாமல் அல்லது உறவுகள் இல்லாமல் உயிரிழப்பவர்களின் உடல்களுக்கும் உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்குகளை நடத்துவது காவல்துறையின் முக்கியமான மனிதநேயப் பொறுப்புகளில் ஒன்றாகும். அதனை தஞ்சாவூர் காவல்துறையினர் மிகுந்த பொறுப்புணர்வுடனும் கருணையுடனும் நிறைவேற்றியுள்ளனர்.

உறவினர்கள் இல்லாத வாழ்க்கை எவ்வளவு வேதனையானதோ, அதேபோல் உறவுகள் இல்லாத இறுதியும் வலிமிகுந்த ஒன்றுதான். அந்த வலியை மனிதநேயத்தால் நிரப்பிய தஞ்சாவூர் காவல்துறையின் இந்த செயல், பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இதேபோல் பலமுறை உரிமை கோராத உடல்களை போலீசாரே இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.