நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை  அடுத்துள்ள வடவூர் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த மாடசாமி (40) விவசாய கூலி வேலை செய்து வருகிறார். தனது சொந்தமான இடத்தில் கான்கிரீட் வீட்டிற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்   இவர் தனது மனைவி ஜான்சிராணி மற்றும் மகள் கனிஷ்கா ஆகியோருடன் அருகில் உள்ள கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். வழக்கம்போல கூரை வீட்டில் மூவரும் உணவு உண்டு விட்டு படுத்து தூங்கிய போது திடீரென வீட்டின்  சுவர் இடிந்து  விழுந்துள்ளது.




உடனடியாக அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, பார்த்ததில் மாடசாமி மற்றும் ஜான்சி ராணி ஆகியோர் பலத்த காயங்களோடு உயிருக்கு போராடி வந்தனர். கிராம மக்கள் அவர்களை இடிபாடுகளில் இருந்து போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு இருந்தவர்கள் அப்போது உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும் மீட்கப்பட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவசர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளித்தனர் இதில்  மாடசாமி சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்த நிலையில் ஜானசிராணி சிகிச்சை பெற்று வருகிறார்.




மேலும்  கனிஷ்கா காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வீட்டு சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.