திமுக முக்கிய பிரமுகர் வீட்டில் நகைகள் கொள்ளையடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திமுக முன்னாள் எம்பியின் வீட்டில் 87 பவுன் நகைகளை கொள்ளை அடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே குடும்பத்தை சேர்ந்த தலைமறைவாக உள்ள ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியைச் சேர்ந்தவர் ஏ.கே.எஸ். விஜயன். இவர் திமுக சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் 1999,2004,2009 ஆகிய மூன்று முறை போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுக விவசாய அணியின் மாநில செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சேகரன் நகரில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது மனைவியும், மகளும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த நவ.28-ம் தேதி இரவு ஏ.கே.எஸ்.விஜயனின் மனைவி ஜோதிமணி தனது மகளை அழைத்துக் கொண்டு சித்தமல்லியில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் கடந்த 1ம் தேதி காலை ஏகேஎஸ்.விஜயன் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் தஞ்சாவூரில் உள்ள வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கேட் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் இருந்த 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஏ.கே.எஸ்.விஜயன் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் டவுன் டி.எஸ்.பி. சோமசுந்தரம், வல்லம் டி.எஸ்.பி. காயத்ரி, இன்ஸ்பெக்டர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வெ.சந்திரா, தாலுகா சோமசுந்தரம், வல்லம் முத்துக்குமார் மற்றும் எஸ்.ஐ., அருள் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் எம்பி.,யின் வீடு அமைந்துள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியோடு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தர்மபுரியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அம்மா, மகன்கள், மகள் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தர்மபுரிக்கு விரைந்து சென்று ராயல் நகரை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகன்கள் சாதிக் பாஷா (33), மொய்தீன் (37), மகள் ஆயிஷா பர்வீன் (30), மனைவி பாத்திமா ரசூல் (54) ஆகியோரை தஞ்சாவூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளையடித்தது மேற்கண்ட 4 பேரும்தான் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 87 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஐந்து நாட்களுக்குள் விரைவாக விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பாராட்டுக்கள் தெரிவித்தார்.





















