தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி இரட்டைமடி வலை,  அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதனால் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள், அதனை பயன் படுத்தாத மீனவர்கள் இன இருதரப்பு மீனவர்களால மீனவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டு, இருதரப்பினரும் அடிக்கடி மோதிக்கொள்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் இருந்து வந்தது.




இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் வாரத்தில் இரண்டு நாட்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி 12 நாட்டிகல் மயிலுக்கு  அப்பால் மீன் பிடிக்கலாம் என்று, உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது.  இத்தீர்ப்பை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை கிராமமான தரங்கம்பாடியில்  சுருக்குமடி வலையை முற்றிலும் தடைசெய்ய கோறுவது தொடர்பாக 11 மாவட்ட மீனவ பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை பொதுக்கூட்டம் தரங்கம்பாடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11  மாவட்டங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலை, இரட்டைமடி வலை, அதிக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகு ஆகியவற்றை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்பது குறித்து மீனவ பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து ஆலோசனை மேற்கொண்டனர்.




பின்னர், கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடிவலை, இரட்டைமடிவலை, அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ள விசைப்படகு ஆகிய மூன்றையும் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும், சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை வருமானால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும், சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கம் சூழ்நிலை ஏற்பட்டால் 11 மாவட்ட மீனவ கிராமங்களும் தொழில் மறியல் செய்வது என்று ஏகமனதாக 3 தீர்மானங்கள் கடந்த மாதம் நிறைவேற்றிருந்தனர். 




இந்த சூழலில் மீண்டும் மயிலாடுதுறை மாவட்டம்  தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 19 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தரங்கம்பாடி, சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளக்கோயில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, உள்ளிட்ட 19 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நீண்ட விவாதம் மற்றும்  ஆலோசனைக்குப் பிறகு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் பழையாறு துறைமுகத்திலிருந்து தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலை மற்றும் அதிவேக  என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பதை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இது தொடர்பாக  அனைத்து மீனவக் கிராம பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.




அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் 19 மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை சந்தித்து மனு அளித்தனர். அதில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி வலை மற்றும் அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதால் சிறுதொழில் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், மேற்கண்ட மீன்பிடி தொழிலை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும் என்றும், 




இரட்டைமடி வலை மற்றும் அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை பயன்படுத்தி தொழில் செய்யும் பூம்புகார் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தரங்கம்பாடி தலைமை மீனவ கிராமம் தலைமையில் 19 மீனவ பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்,  மனுவில் தெரிவித்துள்ளனர்.  மேலும், தடையை மீறி மீன்பிடிப்பவர்கள் குறித்த வீடியோ பதிவுகளை ஆட்சியரிடம் காண்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அனைவரிடமும் மனுவை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.