பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், தற்போது திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் - சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். உ.வே.சா. தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர்த் தன் 17 ஆம் வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.




இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் 'தமிழ்த் தாத்தா' எனத் தமிழர்களால் சிறப்பிக்கப்பட்டார். இவர் ஒரு தமிழறிஞர். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்தவர். உ.வே.சா. அவர்கள் 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.


உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநானூற்றிற்கும் புறநானூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவில் இருந்து காப்பாற்றிப் பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர். உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துகளையும் விற்றுப் பல தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.சங்க இலக்கியங்களைப் பற்றி இன்று பேச முடிவதற்கு உ.வே.சா. பெரும் காரணமாவார். சங்க கால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிய இவருடைய உழைப்புப் பெரிதும் உதவியது.




இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளைப் பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார்.சீவகசிந்தாமணியைக் கற்றுக் கொடுக்க முயன்ற போது ஏட்டுச்சுவடியிலிருந்த நூலை மிகுந்த சிரமத்திற்கிடையில் கற்றுப் பாடம் சொல்லிக் கொடுத்ததால் இந்த நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர், இந்த நூலை 1887-ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிட்டார்.


சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி அவ்வுலக (ஆன்மீக) வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால், என் அன்னை தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது எனக் கூறுவாராம். இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஓர் ஊரில் நிலையாகத் தங்குவதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராகச் இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடி அலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக் கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் தியாகமும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.



தமிழுக்காக பாடுபட்ட உவசா,  1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி இயற்கை எய்தினார். இத்தகைய சிறப்பு பெற்ற தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 168 ஆவது பிறந்த நாள் விழா, அவர் பிறந்த ஊரான உத்தமதானபுரத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன்,  உ.வே.சா.வின் பிறந்த இல்லத்துக்குச் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினார். இந்நிகழ்வில் பதிவாளர்(பொறுப்பு) முனைவர் ரெ.நீலகண்டன் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு  உறுப்பினர்கள் அரங்கபாரி, அமுதா மற்றும் மனோகரன், துறைத்  தலைவர்கள் முனைவர்கள் உல. பாலசுப்பிரமணியன்,  மோ.கோ.கோவைமணி, துணைப் பதிவாளர் கோ.பன்னீர்செல்வம், உத்தமதானபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட கருவூல அலுவலர் அன்பழகன், உத்தமதானபுர ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.