தஞ்சாவூர்: தஞ்சை பில்லுக்காரத்தெரு சுந்தரமூர்த்தி விநாயகர், தண்டாயுதபாணி கோயிலில் 100-வது ஆண்டு தைப்பூச திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வழிபட்டனர்
தஞ்சாவூர் பில்லுக்கார தெருவில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர், தண்டாயுதபாணி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று 100-வது ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது.தைப்பூசத்தை முன்னிட்டு சுந்தரமூர்த்தி விநாயகர், தண்டாயுதப்பாணி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 50 பால் குடங்கள், 30-க்கும் மேற்பட்ட காவடிகள் எடுத்து ஊர்வலமாக காந்திஜி ரோடு, ஆபிரகாம் பண்டிதர் ரோடு , கீரைக்கார தெரு, மேட்டுப் பிள்ளையார் கோவில் தெரு வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் திருத்தணி முருகன், சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.விழாவில் நாளை மாலை திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. 3-ந்தேதி மாலையில் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. பின்னர் விடையாற்றி விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருச்சேறை கோயிலில் தைப்பூச பெருவிழா தேரோட்டம்
திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலில் தைப்பூச பெருவிழா அமைச்சர் கோவி செழியன் வடம் பிடித்து துவக்கி வைக்க திரளான பக்தர்கள் சாரநாதா சாரநாதா என முழக்கமிட்டவாறு தேரை இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேரையில் சாரநாயகி உடனாய சாரநாத பெருமாள் கோவில் உள்ளது 108 வைணவ தளங்களில் 12வது தலமாகவும் வைணவ தலங்களிலேயே தைப்பூச தேரோட்டம் நடைபெறும் ஒரே தலமாகவும் போற்றப்படும் இங்கு தைப்பூச பெருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் பஞ்சலட்சுமிகளுடன் எழுந்தருளினார். மூலவர் தங்க அங்கி சேவையில் அருள் பாலித்தார். உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தேரினை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார் இதில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான வந்திருந்த பக்தர்கள் சாரநாதா சாரநாதா என முழங்கியவாறு பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
