நடப்பு குறுவை பருவத்தில் 1.68 லட்சம் டன் நெல் கொள்முதல்... நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தகவல்
நடப்பு பருவத்தில் 3 லட்சம் டன் வரை கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த ஒரே கிராமங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் 1.68 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 73 ஆயிரம் டன் நெல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் காட்டூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெறும் பணிகளை தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தென்னமநாட்டில் உள்ள கொள்முதல் நிலையம், தஞ்சையில் உள்ள சந்தானக்குடோன் சேமிப்பு கிடங்கிலும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சை மாவட்டத்தில் 1-9-25 முதல் குறுவை நெல் கொள்முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 1 லட்சத்து 68 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 43 டன் நெல் இயக்கம் செய்து குடோன் மற்றும் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது கொள்முதல் நிலையங்களில் இருப்பு 25 ஆயிரம் டன் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 95 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
நடப்பு சீசனில் 75 ஆயிரம் டன் அறுவடை ஆகாமல் நிலுவையில் உள்ளது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்துக்கும் 2 முதல் 3 லாரிகள் அனுப்பப்பட்டு நெல் இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. மழை காரணமாக 2 நாள் பணிகள் தாமதம் ஆனது. இப்போது விரைவு படுத்தப்பட்டு கொள்முதல் நிலையங்களிலும் இருப்பு குறைந்து வருகிறது. நடப்பு பருவத்தில் 3 லட்சம் டன் வரை கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த ஒரே கிராமங்களில் கூடுதல் நெல் கொள்முதுல் நிலையங்களும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன. தனியாருக்கு சொந்தமான 16 ஆயிரம் டன் கொள்ளவு கொண்ட குடோனை வாடகைக்கு எடுத்து நெல் மற்றும் அரிசி இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாளில் மட்டும் 7 அயிரம் டன் நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடோனில் இடம் இல்லாத நிலை இருந்தது. தற்போது அந்த நிலை மாறி விட்டது. தற்போது ரெயில் வேகன் மற்றும் சாலை மார்க்கமாக தினமும் 8 ஆயிரம் டன் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பபட்டு வருகிறது. தற்போது தினமும் 5 ஆயிரம் டன் தான் கொள்முதுல் செய்யப்படுகிறது. கொள்முதலை விட வெளிமாவட்டஙக்ளுக்கு அனுப்புவது அதிகரித்துள்ளதால் இருப்பு குறைந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது 45 அரிசி ஆரவை ஆலைகள் மூலம் மாதம் 80 ஆயிரம் டன் அரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறுவை நெல் கொள்முதுல் பணிகள் 31-ந்தேதிக்குள் இறுதிக்கட்டத்தை எட்டுவிடும். தற்போது 17 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அரசு தற்போது தினமும் 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இரவு 8.30 மணி வரையும, விடுமுறை நாட்களிலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மத்தியக்குழு வருவதற்கான ஆணை வந்து விட்டது. நாளை (இன்று) வரும் என எதிர்பார்க்கிறோம். வெளி மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் 66 ஆயிரம் டன்னும், சாலை மார்க்கமாக 7 ஆயிரம் டன்னும் அனுப்பப்பட்டுள்ளது.
சுமைதூக்கும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதியில் உள்ள பணியாளர்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாற்று ஏற்பாடு செய்து வெளி மாவட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.





















