”நானும், நாசரும் ஹோட்டலில் ஒன்றாக வெயிட்டராக வேலை பார்த்து இருக்கிறோம். ஏன் அந்த படத்தில் அப்படி ஒரு கேரக்டரில் நடித்தேன் என ஃபீல் பண்ணேன்னு” தலைவாசல் விஜய் கூறியுள்ளார். 


1992-ஆம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய், தேவர் மகன், மகாநதி, விஷ்ணு, காதல் கோட்டை, மகளிர் மட்டும், காதலுக்கு மரியாதை, தர்மா, அமர்க்களம், சிம்மராசி, ராஜஸ்தான், சிங்கம்-2, தோனி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் அசத்திய தலைவாசல் விஜய், தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். 


இந்த நிலையில் சமூக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த தலைவாசல் விஜய் தனது பழைய கால சினிமா அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். நாசரும், தானும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்ற தலைவாசல் விஜய், சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்த காலத்தில் ரூ.2-க்கு செட் தோசை வாங்கி இரண்டு பேரும் சாப்பிட்டு இருக்கிறோம் என்றார். ”ஒருமுறை ரயிலில் போகும்போது நானும், நாசரும் அதிகமாக சண்டை போட்டு திட்டி கொண்டதாகவும், எங்களை அந்த ரயிலில் பயணித்த பொதுமக்கள்தான் பிரித்து விட்டார்கள், பின்னர் ரயிலை விட்டு இறங்கும்போது நாங்கள் இருவரும் ’ஓகே டா மச்சான் வரேன்’ என்று சொல்லிட்டு போனதை கேட்ட அங்கிருந்தவர்கள் எங்களை கோபமாக பார்த்தனர். அந்த அளவுக்கு பேசி வச்சிக்கிட்டு நானும், நாசரும் கிண்டலடித்து கொள்வோம்” என்றார்.


தேவயானி நடித்த முதல் படமான காதல் கோட்டையில் தலைவாசல் நடித்திருப்பார். தேவயானியை தேடி செல்லும் அஜித்தை ரிக்ஷாவில் அழைத்து செல்லும் தலைவாசல் விஜய், அஜித்தின் பார்க்காத காதலை கேட்டு மற்றவர்கள் எல்லாம் நாய் காதல் செய்கிறார்கள் என பேசி இருப்பார். அந்த டயலாக்கை பேசிக்காட்டிய தலைவாசல் விஜய், “எப்போவாச்சு நான் காரில் செல்லும் போது லவ்வர்ஸ் பைக்கில் போவதை பார்ப்பேன். என்னை பார்த்தால் கட்டிப்பிடித்து இருக்கும் அவர்கள் கொஞ்சம் இடைவெளி விட்டுப்போவார்கள்” என கூறி சிரித்தார். 


கார்த்திக், சுவலஷ்மி நடித்த கோகுலத்தில் சீதையில் பெண்களை விற்கும் தொழில் செய்யும் கேரக்டரில் நாசர் நடித்திருப்பார். அந்த படத்தில் அப்படி ஒரு கேரக்டரில் ஏன் நடித்தோம் என வருந்தியதாக கூறிய தலைவாசல் விஜய், படத்தின் ஷூட்டிங்போது ஒரு பெண்ணை தவறான தொழிலுக்கு அழைக்கும் டயலாக் சொன்னபோது பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண் தனது மூஞ்சில் துப்பிய தருணத்தையும் தலைவாசல் விஜய் பகிர்ந்து கொண்டார்.