சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இடையர் தெருவில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் சிமெண்ட் சாலை 1949ம் ஆண்டு செட்டிநாடு கலாச்சாரத்தின் படி கடுக்காய் கருப்பட்டி போன்ற இயற்கை முறை கலவையில் அமைக்கப்பட்டது. அச்சாலை சேதமடையாமல் வழுவழுவென உலகின் மிகப் பழமையான சிமெண்ட் சாலையாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக இச்சாலையை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு உடைக்க முயற்சி நடந்தது. அதை தடுக்கும் நோக்குடன் பரப்புரை இறுதி நாளான இன்று 70 ஆண்டு காலச் சாந்து சாலையை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார், சம்மந்தப்பட்ட சாலையில் அமர்ந்து மண் சோறு உண்டார். பிரசார இறுதி நாளில் எடுத்த இந்த முயற்சியை ஒரு தரப்பினர் விமர்சித்தாலும், மற்றொரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.