தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசுப்பணியாளர்கள், காவல்துறையினர் மட்டுமின்றி 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் தபால் வாக்குகள் அனுப்பலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறும்போது, “ தமிழகம் முழுவதும் 4.66 லட்சம் தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இதுவரை 1.31 லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 92 ஆயிரத்து 559 நபர்களுக்கு தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், 30 ஆயிரத்து 894 தபால் வாக்குச்சீட்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த தபால் வாக்குகள் அனைத்தும் தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 5-ஆம் தேதிவரை பெறப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கையான மே 2-ந் தேதி காலை 8 மணிவரை தங்களது வாக்குகளை தபால் வாக்கு மூலம் செலுத்தலாம்” என்றார்.