TN Corona LIVE Updates: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேலும் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. டீ கடைகள் திறக்க அனுமதியில்லை. மளிகை, காய்கறி, பலசரக்கு, இறைச்சி, மீன் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதித்து தமிழக அரசு உத்தரவு

Continues below advertisement

LIVE

Background

கொரோனா பரவல் கட்டுப்பாடு தொடர்பான அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்றுமுன் தினம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிகழ்ந்தது. கூட்டத்தின் முடிவில் எட்டப்பட்ட தீர்மானங்களை அடுத்து ஊரடங்கை மிகக் கடுமையானதாக்க வேண்டும் என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. இதனடிப்படையில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 4 மணிமுதல் அமலுக்கு வந்தது.

1. புதிய கட்டுப்பாடுகள்

 

• தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் (e-commerce) மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள். இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

 

• ATM, பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும்.

 

• ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

 

• பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.

 

• காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

 

• தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.

 

* மின் வணிக நிறுவனங்கள்(e-commerce) மதியம் 02.00 செயல்பட மணி முதல் மாலை 06.00 மணி முடிய
செயல்பட அனுமதிக்கப்படும். 

 

இ-பதிவு முறை (e-Registration)

 

• வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை (e-Registration) கட்டாயமாக்கப்படும்.

 

• அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை (Elderly care) போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ பதிவுமுறை (e-Registration) (https://eregister, tnega. org). கட்டாயமாக்கப்படும்.

 

• இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

Continues below advertisement
20:33 PM (IST)  •  15 May 2021

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 303 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று 31 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 658 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 65 ஆயிரத்து 35 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் மாநிலம் முழுவதும் 303 நபர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்து 17 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 905 ஆகும். இதனால், மொத்தம் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 39 ஆயிரத்து 887 ஆக உயர்ந்துள்ளது.

18:36 PM (IST)  •  15 May 2021

கொரோனா நிவாரணத் தொகையை நாளையும் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணமாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்க அரசு சார்பில் டோக்கன் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முழு ஊரடங்கு நாளானா நாளையும் நியாய விலைக்கடைகளில் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

16:46 PM (IST)  •  15 May 2021

தமிழகத்தில் 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

விருதுநகர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும். ஸ்டெர்லைட் ஆலையில் 40 டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அவை 3 நாட்களில் சரி செய்யப்பட்டு தொடங்கப்படும். தமிழகத்தில் சுகாதாரத்துறையுடன் தொழில்துறையும் இணைந்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நெதர்லாந்து நாட்டில் இருந்து 4 டன் வெப்பநிலை கொதிகலன்கள், சீனாவில் இருந்து 12 கண்டெய்னர் மூலமாக ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

16:04 PM (IST)  •  15 May 2021

ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தில் கைது - தமிழக முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகம் என்றளவில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் சில பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து மற்றும் படுக்கைகள் வசதி தட்டுப்பாடு என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

16:03 PM (IST)  •  15 May 2021

பெருநகரங்களிலும் வார் ரூம் அமைக்க தமிழக அரசு முடிவு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா வார் ரூம்கள் அமைக்கப்படும் - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். கோவையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த தகவலை தெரிவித்தார். 

15:29 PM (IST)  •  15 May 2021

கொரோனா தடுப்பூசி ஒப்பந்த புள்ளி கோரியது தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி கொள்முதலில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை போக்குவதற்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் இன்று கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இந்த ஒப்பந்த விதிப்படி, 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் மட்டும் ஜூன் 5-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

14:25 PM (IST)  •  15 May 2021

ரெம்டெசிவருக்காக கூடும் ஏராளமான மக்கள்

நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே ரெம்டெசிவர் மருந்தை வாங்க  ஏராளமான மக்கள் கூடுகிறார்கள்.


“எனது குடும்பமும் மருத்துவமனையில் உள்ளது. நான் கடந்த 10 நாட்களாக முயற்சி செய்கிறேன். ஆனால் இன்னும் மருந்து கிடைக்கவில்லை. அரசாங்கம் படுக்கைகளை ஒழுங்கமைக்க முயற்சிக்கிறது, ஆனால் ரெம்டெசிவிர் மருந்து தொடர்பாக எந்த முன்னேற்றமும் செய்யவில்லை” என்று மருந்து வாங்க வந்த பெண் ஒருவர் கூறினார்.



 

14:08 PM (IST)  •  15 May 2021

மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் சகோதரர் கொரோனாவுக்கு பலி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

14:00 PM (IST)  •  15 May 2021

மேலும் 6 லட்சம் கோவிஷீல்டு தமிழகத்திற்கு வந்தன

புனேவில் இருந்து மேலும் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அந்த மருந்துகள், தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்து கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட உள்ளது. 

13:57 PM (IST)  •  15 May 2021

தமிழ்நாட்டில் 2 நாள்களில் ஆக்சிஜன் விநியோகம் சீரடையும்

தமிழ்நாட்டில் 2 நாள்களில் ஆக்சிஜன் விநியோகம் சீரடையும். ஆக்சிஜனை எடுத்துச் செல்ல சீனாவில் இருந்து 12 கன்டெய்னர்கள் கொண்ட வரப்பட உள்ளன - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

13:09 PM (IST)  •  15 May 2021

புதுச்சேரி முதல்வர் கொரோனாவில் இருந்து மீண்டார்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை புதுச்சேரி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

12:50 PM (IST)  •  15 May 2021

புதுச்சேரியில் மேலும் 1,598 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில்  மேலும் 1,598 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 82,545 ஆக உயர்ந்தது. ஒரேநாளில் கொரோனாவால் 20 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,199 ஆக அதிகரித்தது.

11:59 AM (IST)  •  15 May 2021

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ரெம்டெசிவர் மற்றும் ஆக்சிஜனை பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தால் குண்டர்  சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

11:50 AM (IST)  •  15 May 2021

முஹம்மது யூசுப் மறைவுக்கு முதல்வர் மு.க,ஸ்டாலின் இரங்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுப் மறைவுக்கு முதல்வர் மு.க,ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

10:57 AM (IST)  •  15 May 2021

கொரோனா உயிரிழப்புகளை மறைக்கக் கூடாது; வெளிப்படைத்தன்மை தேவை - ராமதாஸ்

கொரோனா உயிரிழப்புகள் குறித்த உண்மையான புள்ளி விவரங்கள் வெளியிடப்படும் போது ஒருவகை  பதற்றமும், அச்சமும் ஏற்படலாம். அதில் தவறு இல்லை. ஒரு வகையில் கொரோனா பாதிப்புகளின் தீவிரத்தை உணர்ந்து கொண்டு, மக்கள் விழிப்புடன் இருக்கவும், ஊரடங்கை மதித்து நடப்பதற்கும் அது உதவக் கூடும். எனவே, கொரோனா உயிரிழப்புகளை மறைக்காமல், உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும்; முழு ஊரடங்கை கடுமையாக செயல்படுத்தி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

10:17 AM (IST)  •  15 May 2021

இந்தியாவில் ஒரேநாளில் 3,26,098 பேருக்கு கொரோனா

நாட்டில் ஒரே நாளில்  3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சத்து 46 ஆயிரத்து 809-இல் இருந்து 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்து 317-ல் இருந்து 2 லட்சத்து 66 ஆயிரத்து 207-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 299 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை  2 ,00, 79,599 இல் இருந்து 2 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 898ஆக அதிகரித்துள்ளது.

09:54 AM (IST)  •  15 May 2021

18.04 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

இந்தியாவில் இதுவரை 18.04 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரேநாளில் 11.03 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

09:54 AM (IST)  •  15 May 2021

18.04 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

இந்தியாவில் இதுவரை 18.04 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரேநாளில் 11.03 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

09:44 AM (IST)  •  15 May 2021

நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் விற்பனை தொடங்கியது

சென்னை கீழ்ப்பாக்கத்துக்கு பதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கியது.


 


‘சிறப்பு விளையாட்டு ஆண்கள் விடுதியில் காலை 9 மணி முதல் தினமும் 300 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவர் விற்பனை செய்யப்படும். ஸ்டேடியத்தின் 5ஆவது நுழைவு வாயில் (மை லேடி பூங்கா) வழியாக மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். மருந்தை வாங்கியபிறகு 4ஆவது வாயில் வழியாக மக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்’ என மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

09:16 AM (IST)  •  15 May 2021

war room-இல் முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள war room-இல் முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீரென நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

08:46 AM (IST)  •  15 May 2021

விசிக பொருளாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் அதிர்ச்சி.

08:41 AM (IST)  •  15 May 2021

கேரளாவில் 4 மாவட்டங்களில் மும்மடங்கு ஊரடங்கு

கேரளாவில் ஊரடங்கை வரும் 23ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். கொரோனா தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில்  நாளை முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

07:32 AM (IST)  •  15 May 2021

உலகளவில் 16.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் 16 கோடியே 25 லட்சத்து 24 ஆயிரத்து 426 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 71 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 கோடியே 3 லட்சத்து 85 ஆயிரத்து 787 ஆக உள்ளது. ஒரு கோடியே 87 லட்சத்து 67 ஆயிரத்து 605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 604 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Sponsored Links by Taboola