”யூடியூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது “: கொதித்தெழுந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்: இர்ஃபானுக்கு நோட்டீஸ்..

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய யூடியூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது , கண்டிக்கத்தக்கது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி, அதனை வீடியோவாக வெளியிட்ட யூடியூபர் இர்ஃபானின் செயலை மன்னிக்க முடியாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

கையேந்திபவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை சென்று, விதவிதமான உணவுகளை ரிவியு செய்து யூடியூபில் வீடியோ வெளியிட்டு வருபவர் இர்ஃபான். நாளடைவில் இவரது சேனல் பிரபலமாக அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை தனது ஷோவிற்கு விருந்தினராக அழைத்து வீடியோ வெளியிட்டார். பின் தனது வீட்டிலேயே ஹைஃபையான செட் அப் அமைத்து அங்கிருந்தபடியேயும் வீடியோ வெளியிட்டார். 

சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்:

இவரது திருமணத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவியே நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அந்த அளவு, இவரது வளர்ச்சியானது இருக்கிறது என்றே சொல்லலாம். இவர் சில எளிய கடைகளையும் பிரபலமாக்கி ,அவர்களுக்கும்  உதவி புரிந்துள்ளார். ஆனால், சமீபத்தில் இர்ஃபான்  சர்ச்சைகளிலும் சிக்கி வருவது தொடர்கதையாகி வருகிறது. 

கடந்த ஆண்டு இர்ஃபானின் கார் விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்தது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதனை பிரம்மாண்டமாக அறிவித்தார். இது மருத்துவர்களிடம் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. குழந்தை பிறப்பதற்கு முன்பு அதன் பாலினத்தை தெரிவிக்கக் கூடாது என்பது மருத்துவ விதி. ஆனால் இர்ஃபான் துபாய் சென்று தனது குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அதன் பாலினத்தை வெளியிட்டது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.

அந்த வகையில் சமீபத்தில் இர்ஃபான் வெளியிட்ட வீடியோவானது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் இர்ஃபானுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து இர்ஃபான் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி வெளியிட்டார். அதில், பிரசவத்தின்போது தனது மனைவியின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டும்  வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள். ஆனால் மருத்துவர்களிடம் இந்த வீடியோ பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இது  இந்திய மருத்துவ சட்டத்தின் படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

நடவடிக்கை:

மேலும் ஊரக நலப்பணி இயக்குநரகத்தில் இர்ஃபான் மீது மருத்துவர்கள் சார்பாக புகாரளிக்கப்பட்டது. இந்த வீடியோ குறித்து இர்ஃபானிடம் விளக்கம் கேட்க உள்ளதாக ஊரக நலப்பணி இயக்குநர் மருத்துவர் ஜே ராஜமூர்த்தி தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “ யூடியூபர் இர்பான் செயல் மன்னிக்க முடியாது, கண்டிக்கத்தக்கது; இந்த விவகாரம் தொடர்பாக , இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு , நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இர்ஃபான் பிரபலமாக இருப்பதால், அவர் வெளியிடும் வீடியோவை பலரும் பார்ப்பதாலும் , ஏதேனும் சர்ச்சைக்குள்ளாக்கும் வகையில் இருந்தால் உடனடியாக அனைவருக்கும் தெரிந்து , அரசின் கவனத்துக்கும் சென்று விடுகிறது. 

சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள், ஏதேனும் வீடியோக்களை வெளியிடும் போது, அது பிறரின் மீது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால், சமூக பொறுப்புணர்வுடன் வீடியோக்களை வெளியிட வேண்டும். 

 

Continues below advertisement