விழுப்புரம் : விழுப்புரம் -  நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியினை இருசக்கர வாகனத்தில் கட்டி கொண்டு சாகசம் செய்த இளைஞரின் வீடியோ காட்சிகள் சமூல வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார், அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 25-01-24 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக விஜய் தேர்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, தலைவர் விஜய் கடந்த 22ம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்த திட்டமிடபட்டு அதற்கான அனுமதியையும் காவல் துறையினரிடம் பெற்றுள்ளார். கட்சி நிர்வாகிகள் விஜயின் கட்சி கொடி சின்னத்தை பல்வேறு இடங்களில் ஏற்றியும் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.


இந்நிலையில் விழுப்புரத்தை சார்ந்த ராஜசேகர் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்குவது அதில் ஸ்டண்ட் செய்வதிலும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இவர் விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு புதியதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியினை கட்டி கொண்டு சாகசம் (ஸ்டண்ட் ) செய்துள்ளார்.  


தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியுடன் சாகசம் செய்ததை நண்பர்கள் மூலமாக வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளமான இண்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விழுப்புரம் போலீசார் அந்த இளைஞர் யார் என விசாரனை செய்து வருகின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது என காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.