சென்னை துரைப்பாக்கத்தில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவரை, அவருடன் பணிபுரிந்த இளைஞர் திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கி ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்து 20 நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
காதல் வலையில் வீழ்த்திய இளைஞர்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க ஸ்வேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். தனது வாழ்வாதாரத்திற்காக கடந்த 2025-ம் ஆண்டு சென்னை வந்த அவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு அவருடன் பணிபுரிந்த சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்த பிரதீப் குமார் கார்த்திகேயன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
திருமண உறுதிமொழியும் தனிமையில் உல்லாசம்
பிரதீப் குமார், ஸ்வேதாவைத் திருமணம் செய்து கொள்வதாகப் பலமுறை உறுதி அளித்துள்ளார். குறிப்பாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி (காதலர் தினம்), "நாம் கணவன் மனைவியைப் போலவே இருப்போம், உன்னை நான் கடைசி வரை பார்த்துக்கொள்வேன்" என உருக்கமாகப் பேசி அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதன் விளைவாக ஸ்வேதா தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார்.
காதலுக்கு கிடைத்த ஏமாற்றம்
தன்னுடைய கர்ப்பம் குறித்து பிரதீப் குமாரிடம் ஸ்வேதா தெரிவித்தபோது, அவரது முகம் மாறியுள்ளது. "இந்தக் குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று கூறியதுடன், ஸ்வேதாவை மிகவும் இழிவாகப் பேசி அவதூறு செய்துள்ளார். அதன் பிறகு தனது சொந்த ஊரான தேவக்கோட்டைக்குச் சென்றுவிட்ட அவர், ஸ்வேதாவின் தொலைபேசி அழைப்புகளைப் புறக்கணித்து வந்துள்ளார்.
காவல்துறையின் அலட்சியம் - பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்
பாதிக்கப்பட்ட ஸ்வேதா இது குறித்து செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் அளித்து 20 நாட்கள் கடந்தும் காவல்துறை தரப்பில் எந்தவித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டுகிறார். காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதால், குற்றம் சாட்டப்பட்ட பிரதீப் குமார் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து என்னைத் துணிச்சலாக மிரட்டுகிறார்.
என்னால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது' எனக் கூறுவதுடன், தொடர்ந்து தொந்தரவு செய்தால் வயிற்றிலிருக்கும் குழந்தையைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகிறார் என ஸ்வேதா கண்ணீருடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், ஏமாற்றிய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு ஐடி பெண் ஊழியருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதும், புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை தாமதிப்பதும் அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
