தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் 

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியிலுள்ள அம்பேத்கர் தெற்கு தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன் ஆனந்தி என்ற 26 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது இரண்டரை வயதில் புகழினி என்ற பெண் குழந்தை உள்ளது. பிரகாஷ் கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

அதேசமயம் பொன் ஆனந்தியும் கடையநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கணவர் வெளியூரிலும், தான் உள்ளூரிலும் வேலை பார்த்து வந்த நிலையில் மகளை பாவூர்சத்திரம் அருகே வசித்து வரும் தனது பெற்றோரிடம் விட்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. 

Continues below advertisement

அறையில் சிக்கிய கடிதம்

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி தனது மகளை பார்ப்பதற்காக பாவூர்சத்திரம் வந்த பொன் ஆனந்தி மீண்டும் சிவகிரிக்கு சென்று விட்டார். இப்படியான நிலையில் டிசம்பர் 4ம் தேதி காலையில் பிரகாஷின் அம்மாவான செல்வி மருமகளை காண பொன் செல்வி வசித்து வந்த வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. உள்பக்கமாக பூட்டியிந்த நிலையில் செல்வி தன்னிடம் இருந்த இன்னொரு சாவியைக் கொண்டு கதவை திறந்து உள்ளே சென்றார். 

அப்போது வீட்டின் ஒரு அறையில் பொன் ஆனந்தி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்குவதைக் கண்டு செல்வி அதிர்ச்சியடைந்து கதறி கூச்சலிட்டார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பொன் ஆனந்தி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பொன் ஆனந்தி அறையில் கடிதம் ஒன்று போலீசாரின் தேடுதலில் சிக்கியது. 

பணத்தை இழந்ததால் விபரீதம்

அதில் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு யாரும் காரணம் கிடையாது. ஆன்லைன் விளையாட்டில் நான் பணத்தை இழந்து விட்டேன். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இந்த முடிவை எடுத்துள்ளேன் என உருக்கமாக எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் குடும்பத்தினர், பணிபுரியும் இடத்தில் போலீசார் விசாரித்தனர். இதில் தனது வேலைகளுக்கு மத்தியில் பொன் ஆனந்தி அடிக்கடி ஆன்லைன் விளையாட்டுகளை ஆடி வந்துள்ளார். இதில் ரூ.63 ஆயிரம் வரை இழந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)