புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று (நவ.10) உயிரிழந்தார். அவருக்கு வயது 65. வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சிவ மயம், ரத்ர வீணை, மர்ம தேசம், விடாது கருப்பு, காற்றாய் வருவேன், சொர்ண ரேகை உள்ளிட்ட பல்வேறு நாவல்களை எழுதியவர் இந்திரா சௌந்தர்ராஜன். பல்வேறு சிறுகதைகளையும் எழுதி உள்ளார்.
ஒரே மாதத்தில் பிறப்பும் இறப்பும்
1958ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி பிறந்தவர், பிறந்த நாளுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக மறைந்துள்ளார். இவரின் இயற்பெயர் செளந்தர்ராஜன், தாயின் பெயரான இந்திராவை முன்பு சேர்த்து, இந்திரா செளந்தர்ராஜனாக மாறியுள்ளார்.
இந்து மதப் பாரம்பரியங்கள், நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து உண்மைக்கு மிக நெருக்கமாக தனது படைப்புகளைக் கொண்டு வருவதில் இந்திரா சௌந்தர்ராஜன் வல்லவர். அவருக்கு த்ரில்லர், அமானுஷ்ய பரப்பில், லட்சக்கணக்கான வாசகர்கள் உள்ளனர்.
தமிழ்த் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு
இந்திரா செளந்தர்ராஜன் 700 சிறுகதைகள், 340 நாவல்கள், 105 தொடர்களை எழுதியுள்ளார். சிருங்காரம், ஆனந்த புரத்து வீடு, இருட்டு ஆகிய திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். இவரின் நாவல்களில் மர்ம தேசம், விடாது கருப்பு உள்ளிட்டவை தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்து, புகழ் பெற்றுள்ளன.
இந்திரா செளந்தர்ராஜனின் ஏராளமான நாவல்கள் 10-க்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கொண்டுள்ளன. தற்போது ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஆகவும் தனது பங்களிப்பை மக்களுக்கு அளித்து வந்தார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்துள்ளார்.
சாலமன் பாப்பையா இரங்கல்
இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு குறித்து சாலமன் பாப்பையா கூறும்போது, ’’அவர் இன்னும் இலக்கியத் துறைக்கும், எழுத்துக்கும் ஆற்ற வேண்டிய பணி இருக்கிறது. அவரது இழப்பு ஈடு செய்ய இயலாதது. குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
எல்லோருடனும் நன்கு பழக கூடியவர். எந்த தலைப்பிலும் பேசக்கூடியவர், பெரிய மனிதராக தன்னை காட்டிக்கொள்ளமாட்டார், அமைதியான, பண்பட்ட மனிதர்’’ என்று தெரிவித்தார்.