Kovilpatti: ஆசையாக வீடியோ கால்.. ஆப்பு வைத்த பெண் போலீஸ்.. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்!
Kovilpatti Crime News: பெண் அதிகாரிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் போக்குவரத்து காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் செல்வகுமாருடன் நெருங்கி பழங்கியுள்ளார்.

கோவில்பட்டியில் பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் காவல் உதவி ஆய்வாளரை சக பெண் அதிகாரி ஒருவர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசையாக பேசி ஏமாற்றிய பெண் அதிகாரி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் 24ம் தேதி இளம்பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘எனது கணவர் செல்வகுமார் கடந்த 2 ஆண்டுகளாக கோவில்பட்டி போக்குவரத்து காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அதே பிரிவில் கயத்தாறில் பணியாற்றி வந்த பெண் காவல் அதிகாரி ஒருவர் பணியிட மாற்றம் பெற்று வந்தார்.
அந்த பெண் அதிகாரிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதனிடையே எனது கணவரை மிரட்டி பணம் பறிக்க அந்த பெண் அதிகாரியும், நிருபர் ஒருவரும் திட்டமிட்டனர். அதன்படி என்னுடைய கணவர் செல்வகுமாருடன் அந்த பெண் காவல் அதிகாரி நெருங்கி பழங்கியுள்ளார். இருவருக்குமிடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள், ஆடியோக்கள், வீடியோக்களை தனது நண்பரான மதன் என்பவர் துணையுடன் பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல்
இதனிடையே செல்வகுமாருக்கும், அந்த பெண் அதிகாரிக்கும் பழகிய 3 மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி எனது கணவரை தொடர்பு கொண்டு தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்தி விடுவேன், சஸ்பெண்டில் செல்ல வைப்பேன் என அந்த பெண் அதிகாரி மிரட்டினார். எதுவும் செய்யாமல் இருக்க ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.
ஆனால் எனது கணவர் செல்வ குமார் கொடுக்க மறுக்கவே, சில ஆடியோ மற்றும் வீடியோக்களை செப்டம்பர் 6ம் தேதி வெளியிட்டு விட்டார். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினோம். தற்போது எனது கணவரும், அந்த பெண் அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த பெண் ஒரு கும்பலுடன் என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என் கணவரையும், குடும்பத்தினரையும் மிரட்டினார்.
பின்னர் சமாதான பேச்சுவார்த்தை என்ற பெயரில் செப்டம்பர் 17ம் தேதி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது தன்னிடம் உள்ள 40 வீடியோக்கள்,20 ஆடியோக்களை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் வேண்டும் என என்னுடைய குடும்பத்தினரை மிரட்டினார். என் கணவரை திட்டமிட்டு பெண் போலீஸ் அதிகாரி, நிருபர் மற்றும் மதன் என்பவர் ஏமாற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 12 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் காவல் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் மீது மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த பெண் அதிகாரி, நிருபர் இருவரும் இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டு பணம் பறிப்பதை நோக்கமாக கொண்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.





















