ஈரோடு மாவட்டத்தில் சொத்து தகராறில் மனைவியைக் கொலை செய்தததாக செங்கோட்டையன் என்பவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள மாந்தம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவர் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1995ம் ஆண்டு விஜயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. எனினும் விஜயாவை விட்டு விட்டு செங்கோட்டையன் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டார். இப்படியான நிலையில் தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என கேட்டு பெருந்துறையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு விஜயா வழக்கு போட்டார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்றது.
அப்போது விஜயாவுக்கு ரூ.3.81 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், மாதம் ரூ.4,500 வழங்க வேண்டும் எனவும் செங்கோட்டையனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தன்னால் அவ்வளவு தொகையை கொடுக்க முடியாது என்பதால் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார் செங்கோட்டையன். அப்போது ஒரே முறையாக ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என விஜயாவின் தரப்பு நிபந்தனை விதித்துள்ளது. இதனையடுத்து காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள தனது 55 சென்ட் நிலத்தை விற்பனை செய்து பணத்தை செங்கோட்டையன் தயார் செய்து வந்துள்ளார். ஆனால் பெருந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலத்தை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என விஜயா முறையிட்டுள்ளார்.
இதனையறிந்த செங்கோட்டையன் விஜயா மீது கடும் கோபம் கொண்டார். அவரை பழிவாங்க முடிவு செய்தார். அதன்படி டிசம்பர் 7ம் தேதி மதியம் காஞ்சிக்கோவில் சாலையில் விஜயா நடந்து சென்ற நிலையில் அவரை செங்கோட்டையன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விஜயா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டையன் மீது பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்
கடந்த வாரம் கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தனது உறவினருடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கணவன் கொலை செய்து அதனை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். அதில் துரோகத்தின் சம்பளம் மரணம் என பதிவேற்றம் செய்திருந்தார். நெல்லை மாவட்டம் தருவை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் தனது மனைவி ஸ்ரீபிரியாவை கொலை செய்து அப்படி பதிவிட்டிருந்தார். கணவரை பிரிந்து கோவையில் தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்த ஸ்ரீபிரியா, உறவினருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை கண்டு ஆத்திரத்தில் பாலமுருகன் இச்செயலை செய்ததாக சொல்லப்படுகிறது.