தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடலூரில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 748 ஆண்கள், ஆயிரத்து 45 பெண்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் என 3ஆயிரத்து 794 தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு ஆகியவை நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இன்று விதவைப் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30 விதவை பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் தகுதித் தேர்வு நடத்தும் காவலர்கள் விதவை சான்றிதழ் மட்டும் தங்களுக்கு போதாது ஆதரவற்றோருக்கான விதவை சான்றிதழ் இருந்தால் மட்டும் தான் உடற்தகுதி தேர்வு செய்யப்படும் என கூறியதால் அச்சான்றிழை சமர்பிக்காத 9 விதவைப் பெண்களை தகுதித்தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டனர். இதனால் 9 பேரும் அப்பகுதியிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்ணாவில் ஈடுபட்டவர்களில் சிலர் வட்டாட்சியர் கையெழுத்துடன் ஆதரவற்றோர்கான விதவை சான்றிதழ் வைத்திருந்தாலும் ஆர்டிஓ கையெப்பம் வேண்டும் என கூறி வெளியே அனுப்பியதால் வெளியில் வந்த விதவை பெண்கள் கதறி அழுதனர். இதுபோன்ற அறிவிப்பினை தங்களுக்கு யாரும் முன்கூட்டியே எந்த இடத்திலும் கூறவில்லை, இதுமட்டுமின்றி நான் இரண்டாம் நிலை தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்றுதான் உடல் நிலை தேர்வுக்கு தகுதி பெற்று உள்ளோம் ஆனால் இப்பொழுதோ ஆதரவற்ற விதவை சான்றிதழ் வேண்டும் எனக் கூறுகிறார்கள் நாங்கள் எங்கு சென்று பெற்றுக் கொண்டு வருவது என தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.
தகுதித் தேர்விற்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ் அவசியம் எனில் எங்களை தகுதித் தேர்வு எழுத அனுமதித்திருக்க தேவையில்லை ஆனால் எங்களை முதல் தகுதி தேர்விற்கு அனுமதித்துவிட்டு, அதில் நாங்களும் தேர்ச்சி பெற்ற பிறகு திடீரென இவ்வாறு கூறினால் நாங்கள் எங்கே சென்று யாரிடமிருந்து இப்பொழுது சான்றிதழை பெற்றுக் கொண்டு வருவது என கேள்வி எழுப்பிய விதவை பெண்கள், குழந்தைகளை விட்டு விட்டு காலையிலிருந்து இங்கே நின்று கொண்டிருப்பது எந்த உபயோகமும் இல்லை என்பதை நினைக்கும் பொழுது மனவேதனையை அளிப்பதாக கண்ணீர் மல்க கூறினர்.