கடந்த 8 ம் தேதி முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றனர். மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த வருண் சிங் என்ற அதிகாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முப்படை தளபதிகள், இராணுவ அதிகாரிகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து 13 உடல்களும் தனித்தனியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. படுகாயமடைந்த வருண் சிங் உயர் சிகிச்சைக்காக பெங்களூரூ அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வழி நெடுக காத்திருந்த உடல்களை எடுத்துச் சென்ற வாகனங்கள் மீது மலர் தூவி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். இதேபோல பல்வேறு இடங்களில் இராணுவ வீரர்களுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடக்கும் முன்னர் சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த காட்சிகளை கோவையை சேர்ந்த போட்டோகிராபர் ஜோபால் அவரது நண்பர் நாசரின் குடும்பத்தினர் உடன் மலை இரயில் பாதையில் போட்டோ எடுக்கச் சென்ற போது படம் பிடித்துள்ளார். இது குறித்து பேசிய ஜோபால், “இரயில்வே டிராக்கில் நிறைய பேர் போட்டோ எடுப்பதை பார்த்துள்ளேன். அதனால் நாங்களும் சென்று போட்டோ எடுத்தோம். அப்போது ஹெலிகாப்டர் சத்தம் கேட்டது. என்ன இந்த நேரத்தில் ஹெலிகாப்டர் வருதே, சவுண்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கிறதே என வீடியோ எடுத்தேன். ஹெலிகாப்டர் மேகத்திற்குள் சென்றதும் 5 செகண்டில் டமார் என சத்தம் கேட்டது. என் நண்பர் ஓடி வந்து ஒடைச்சிடுச்சா எனக் கேட்ட போது, நானும் ஆமாம் என சொன்னேன். மேலே வரும் போது பத்து நிமிடத்திற்குள் போலீஸ் ஜீப் வந்து விட்டது. அவர்களிடம் கேட்கும் போது, விபத்து எனக்கூறினர்.
நாங்கள் சென்ற போது பயர் சர்வீஸ், ஜீப், ஆம்புலன்ஸ் எல்லாம் வந்து விட்டது. பின்னர் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். இரவு சேனலில் செய்தி பார்க்கும் போது, எந்த எவிடன்ஸ் இல்லை என்பதை அறிந்தோம். அதனால் இந்த விடீயோவை கொடுக்கலாம் என ஆட்சியர் அலுவலகம் வந்தோம். ஆனால் அங்கு யாரும் இல்லை. காவல் நிலையத்திற்கு சென்ற போது, நிகழ்விடத்திற்கு செல்லுமாறு கூறினர். அதன்படி அங்கு சென்று ஒருவரிடம் விடீயோவை கொடுத்து விட்டு வந்து விட்டோம். பின்னர் அனைத்து சேனல்களிலும் வந்து விட்டது.” என அவர் தெரிவித்தார்.