E Rajasekar Profile: செய்யூர் அதிமுக வேட்பாளர் ராஜசேகர்! கிளைச் செயலாளர் To வேட்பாளர்! 49 வருட அரசியல் பயணம்!
Admk Candidate E Rajasekar Profile: "செய்யூர் அதிமுக வேட்பாளராக பெரும்பாக்கம் இ. ராஜசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்."

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் (தனி) சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக பெரும்பாக்கம் இ. ராஜசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் பின்னணி மற்றும் கட்சிப் பதவிகள்:
அதிமுகவில் சுமார் 49 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து வரும் பெரும்பாக்கம் ராஜசேகர், தற்போது அதிமுக புரட்சித்தலைவி பேரவையின் மாநிலத் துணைச் செயலாளராகவும், பரங்கிமலை தெற்கு ஒன்றியச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் கிளைச் செயலாளராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய இவர், மாவட்ட பிரதிநிதி, மாவட்ட மாணவரணிச் செயலாளர், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் மற்றும் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். செங்கல்பட்டு மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அதிமுகவின் முக்கிய முகமாக இவர் திகழ்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் செல்வாக்கு:
பெரும்பாக்கம் பகுதியில் இவரது குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் நீடித்து வருகின்றனர். அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பெரும்பாக்கம் ஊராட்சியின் 12 வார்டுகளையும் இவரது ஆதரவாளர்களே கைப்பற்றினர். ஆளுங்கட்சித் தரப்பில் கடும் போட்டி நிலவிய போதிலும், இவரது ஆதரவுடன் அதிமுக வேட்பாளர் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் களம் மற்றும் எதிர்பார்ப்பு:
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ராஜசேகர், 3,64,571 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அந்தத் தேர்தலின் போதே செய்யூர் சட்டமன்றத் தொகுதி மக்களிடையே இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்யூர் தொகுதியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதால், இந்த முறை இவருக்கே வாய்ப்பு கிடைக்கும் எனத் தொண்டர்கள் எதிர்பார்த்தனர். அதன்படியே வேட்பாளர் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ராஜசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் தனது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளார்.























