திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்த வழக்கில் எம்.எல்.ஏ., ஏடிஜிபி ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதே இதற்கு காரணம். 

Continues below advertisement

சிறைக்குச் சென்ற ஏடிஜிபி:

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஐஐி பொறுப்பில் உள்ள அஸ்ரா கார்க் தனது காவல் எல்லையில் நடந்த இந்த சம்பவத்தில் கடத்தலில் தொடர்புடையவர் தன்னை விட உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் என்றாலும், தக்க தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று ஏடிஜிபி ஜெயராமன் மீதே கைது நடவடிக்கை எடுத்துள்ளார். 

அசத்திய அஸ்ரா கார்க்:

கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமன் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டு, தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு அஸ்ரா கார்க்கின் கீழ் வந்ததாலே இந்த துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர். யார் இந்த அஸ்ரா கார்க்? அவர் காவல்துறையில் ஆற்றிய பங்கு என்னென்ன? என்பதை கீழே காணலாம். 

Continues below advertisement

யார் இந்த பஞ்சாப் என்ஜினியர்?

அடிப்படையில் அஸ்ரா கார்க் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்தவர். இவர் ஒரு எலக்ட்ரானிக் எஞ்ஜினியர். காவல்துறையின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக ஐபிஎஸ் தேர்வில் 2004ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். தமிழ்நாடு கேடரில் தேர்வான இவர் தனது காவல்துறை பணியை திருப்பத்தூரில் தொடங்கினார். அப்போது, வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்டு இருந்த திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியை அஸ்ரா கார்க் தொடங்கினார். 

நெல்லை அசத்தல்:

அப்போது, இவரது பணி அனைவராலும் பாராட்டும் வண்ணம் இருந்தது. பின்னர், 2008ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டார். தமிழ்நாட்டில் அதிக பிரச்சினைகள் கொண்ட மாவட்டங்களில் நெல்லை முக்கியமானது. அவர் நெல்லை எஸ்பி-யாக பொறுப்பேற்றபோது கந்துவட்டி கொடுமை தலைதூக்கி காணப்பட்டது. இதற்காக தனியாக ஒரு சிறப்பு படையை ஏற்படுத்தினார். 

ரவுடிகளை வைத்து வட்டி பணத்தை வசூலிக்கும் கும்பலிடம் இருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். மக்கள் புகார் அளிக்க காத்திருக்காமல் நேரடியாக சிறப்பு படையை அனுப்பி புகார்களை பெற்றார். இவரது அதிரடி நடவடிக்கையால் அப்போது நெல்லையில் இருந்த ரவுடிகள் அலறினர். 

மதுரையிலும் மாஸ்:

திருநெல்வேலியில் தனது அதிரடியால் ரவுடிகளை அலறவிட்ட அஸ்ரா கார்க்கிற்கு 2010ம் ஆண்டு மதுரை மாவட்ட எஸ்பி-யாக பதவி வழங்கப்பட்டது. மதுரை மாவட்டமும் நெல்லை மாவட்டத்திற்கு சளைத்தது அல்ல என்பது போல அஸ்ரா கார்க்கிற்கு சவால் மீது சவால் காத்திருந்தது. 

கிரானைட் குவாரி முறைகேடு:

மதுரையில் கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்பு புகார், அரசியல் அழுத்தம் என சவால்கள் இருந்தது. எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல் அதிரடியில் மிரட்டினார். அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயத்துடன் இணைந்து மதுரை கிரானைட் குவாரி விவகாரத்தில் பிரபல தொழிலதிபர் பிஆர்பி உள்பட பல முக்கிய பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர். அரசியல் தலைவர்கள் பெயரைக் கூறி பறிக்கப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் மீட்டுக்கொடுக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

மதுரை உத்தபுரத்தில் இரு சமுதாயத்தினர் மத்தியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த சாதிய மோதலில் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். நீண்ட காலமாக ஒரு சமுதாயத்தினர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் அவர்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொண்டார். 

சாதிய தீண்டாமைக்கு எதிரான நடவடிக்கை:

தர்மபுரி மாவட்டத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது சில இடங்களில் இருந்த இரட்டைக்குவளை முறையை அடியோடு ஒழித்தார்.  இவர் கையாண்ட வழக்குளில் பெண் ஒருவர் தனது கணவரை கொன்றதற்காக கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் தனது மகளை தனது கணவனே பாலியல் வன்கொடுமை செய்ய வந்த காரணத்திற்காகவே அந்த பெண் தற்காப்பிற்காக கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை  ஐபிசி 100ன் கீழ் விடுவிக்க அஸ்ரா கார்க் உத்தரவிட்டது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 

மறக்க முடியாத விசாரணை:

மேலும், தேனியில் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞருடன் திருமணம் நடக்க இருந்த பெண்ணை கடைசி நேரத்தில் காப்பாற்றி அந்த திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார். தனது அபாரமான திறமையான மற்றும் தைரியமான அஸ்ரா கார்க்கிற்கு பதவி உயர்வும் தேடி வந்தது. 

2016ம் ஆண்டு அவர் மத்திய பணிக்கு சென்றார். அங்கு மத்திய புலனாய்வு பிரிவிற்குச் சென்ற அவர் குர்கானில் நடந்த பள்ளியில் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடத்துனர் அப்பாவி என்பதையும், உண்மையான குற்றவாளி யார்? என்பதையும் தனது திறமையால் வெளியில் கொண்டு வந்தார்.

ஐஐி:

இதையடுத்து, மத்திய பணியில் அவர் இருந்தபோது அவருக்கு டிஜஜியாக 2018ம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளார். 2022ம் ஆண்டு ஐஜியாக நியமிக்கப்பட்டார். தற்போது வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பு வகிக்கும் அஸ்ரா கார்க் கடத்தலில் ஈடுபட்ட ஏடிஜிபி செய்த தவறுக்காக தண்டனை பெற்றுத் தந்ததில் முதன்மையானவராக உள்ளார். 

நேர்மையான அதிகாரியாக பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வரும் அஸ்ரா கார்க்கிற்கு பொதுமக்கள் தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையையும் இவரது தலைமையில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

விருதுகள்:

இவரது கடமை உணர்வை பாராட்டி சிறந்த கடமை அர்ப்பணிப்பிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் விருது, பொது சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதலமைச்சரின் காவல் பதக்கம், சிறப்பான சேவைக்கான காவல் பதக்கம், முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.