Continues below advertisement

ரசிகர்களை கவர்ந்த சிறை திரைப்படம்

தமிழ் திரை உலகில்  2025ஆம் ஆண்டு பல திரைப்படங்கள் வெளியாகி சாதனை படைத்தாலும், ஆண்டு இறுதியில் வெளியான ஒரு திரைப்படம் தான் அனைவரது கவனத்தையும் பெரிய அளவில் ஈர்த்துள்ளது. ஆமாம் விக்ரம் பிரபு நடித்த சிறை என்கிற திரைப்படம். ஆயுதப்படைக் காவலராக விக்ரம் பிரபு, விசாரணைக் கைதியாக அக்‌ஷய் குமார் (அப்துல் ரவூஃப்) நடித்துள்ளனர். விசாரணை கைதியை நீதிமன்றத்திற்கு பேருந்தில் அழைத்து செல்லும் போது ஏற்படும் சம்பவங்கள் தொடர்பாக இந்த சிறை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. திரையரங்குளில் இந்த படம் நல்ல வரவேற்பை பெறுள்ள நிலையில், இந்த திரைப்படத்தில் இஸ்லாமிய கைதியான அப்துல் ரவூஃப் தொடர்பான காட்சிகள் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

அப்துல் ரவூப் யார்.?

அதன்படி, படத்தில் ஒரு இடத்தில் விசாரணை கைதியை அழைத்து செல்லும் போது, துப்பாக்கியில் குண்டுகள் முழுவதுமாக லோட் செய்யப்பட்டிருக்கும். இது தொடர்பாக படத்தில் காவல் ஆய்வாளர், ஆயதப்படை காவலரிடம் விசாரணை நடத்தும் போது, ஏன் துப்பாக்கியில் குண்டுக்கள் நிரபப்பட்டுள்ளது என கேள்வி எழுப்புவார். இதற்கு, கைதி ஒரு முஸ்லிம் என அவர் தெரிவிப்பார். அப்போது, அந்த காவல் ஆய்வாளர் நானும் முஸ்லிம் தான் என பதில் கொடுத்து, ஆயுதப்படை காவலரை திட்டுவார். அப்போது அப்துல் ரவூப் யார் இதற்கு முன்பு அந்த பெயரை கேள்வி பட்டு இருக்கியா.? என கேட்பார். அப்துல் ரவூப் இலங்கை தமிழர்களுக்காக முதன் முதலில் தீக்குளித்து உயிர் இழந்த தமிழர் என அந்த காவல் ஆய்வாளர் தெரிவிப்பார்.

Continues below advertisement

இலங்கையில் இனப்படுகொலை

இதனையடுத்து, யார் இந்த அப்துல் ரவூப் என கேள்வி எழுந்து, சமூக வலைதளங்களில் பலரும் தேடி வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் அப்துல் ரவூப். இங்கையில், தமிழர்கள்- சிங்களர்களுக்கு இடையே இன மோதல் உச்சத்தில் ஏற்பட்ட 1995ஆம் ஆண்டு இலங்கை அதிபராக இருந்த சந்திரிக்கா, யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் இடம்பெயரச் சொல்லி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கை அரசு நடத்திய கொடூரமான போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராகவும் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தமிழகத்திலும் இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் பல கட்ட போராட்டங்களும் தமிழகத்தில் நடைபெற்றது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் தமிழக சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை தமிழர்களுக்காக உயிரை இழந்த முதல் தமிழர்

இதன் காரணமாக, இலங்கை தமிழர்களுக்காக பலரும் பேசவே அச்சப்படும் நிலை உருவானது. அப்போது தான் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 1995 டிசம்பர் 15-ஆம் தேதி அப்துல் ரவூப் என்ற இளைஞர் தீக்குளித்து தனது உயிரை தியாகம் செய்தார். 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக .இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்‘ என முழக்கமிட்டதாவும் கூறப்படுகிறது.

 ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் தீக்குளித்த முதல் தமிழக இளைஞராக அப்துல் ரவூப் பெயர் இடம்பெற்றது.  ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை மத்திய அரசுக்கு இந்த சம்பவம் உணர்த்தியது குறிப்பிடத்தக்கது.