TN Rain Alert: இந்த டிசம்பர் மாதத்திலும் அதிகப்படியான கனமழை தமிழ்நாட்டில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 5 ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் பின்னர், இது புயலாக மாற அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற்றம் அடைந்தால் அதனால் தமிழகத்திற்கு அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த நவம்பர் மாதம் பெய்த மழை போதிய அளவு பெய்யவில்லை என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இந்த டிசம்பர் மாதம் உருவாகி பெய்யவுள்ள மழை தமிழ்நாட்டிற்கு போதிய அளவிலான மழை பெய்யும் என நம்பப்படுகிறது.
அதிகப்படியான மழை.. வெள்ளம்..
மழை அதிகப்படியாக பெய்தால் சென்னையில் கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தினைப் போல் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகளும், மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெற்று வருகிறது. நவம்பர் மாத பருவ மழையின் போது ஏற்கனவே பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. டிசம்பர் மாத மழையின் அளவு நிச்சயம் வெள்ளத்தினை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
- தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வாக்கில் தமிழக-புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.
- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
01.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05.12.2022: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது