அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, ” 2024-ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமையும். ஓ.பி.எஸ். சசிகலா, தினகரன் குறித்து பேசி எங்களது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அவர்களைப் பற்றி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கவும் இல்லை. பிரச்சினை இல்லாத விஷயம் குறித்து நாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார். மேலும், அவர், 20 மாத ஆட்சியில் திமுக குடும்பத்துக்கு தான் விடியல் ஏற்பட்டிருக்கிறது. பொதுக்குழு விதிப்படி நடத்தப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் கட்சிக்கொடி இங்கு பறந்து கொண்டு இருக்கிறது. ஓபிஎஸ் எப்படி கட்சி நடத்த முடியும். அதனால் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அவருடைய நோட்டீஸ் எடுபடாது. சட்டமன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். சட்டமன்ற மாண்புகளை காலில் மிதித்து விட்டு திமுக அரசு செயல்படுகிறது.
ஆதிதிராவிட மக்களை வஞ்சிக்கும் திமுக அரசு
ஜனநாயக கருப்பு வரலாற்றை சட்டமன்றம் கடைபிடிக்கிறது. ஆதிதிராவிட மக்களை வஞ்சிக்கும் செயலில் திமுக அரசு செயல்படுகிறது. மீனவர்கள் வாழ்வாதாரம் போய்விட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கு உகந்த விலை இல்லை. ஆதிதிரவிடர்களுக்கான மத்திய அரசு நிதி ரூபாய் 920 கோடியை அரசு செலவு செய்யமல் திருப்பி அனுப்பியுள்ளது.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை . 2024 தேர்தலில் அதிமுக செய்த திட்டங்களையும், திமுக அரசின் மக்கள் விரோத போக்கினையும் எடுத்துச் சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி, நடாளுமன்றத் தேர்தலுக்கு கிளைக் கழகம் தலைமை கழக நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து பேசினார். உட்கட்சியில் பிரச்சனை இல்லை.
அ.தி.மு.க.வில் எந்த பிரச்சனை இல்லை
மேலும், அ.தி.மு.க.வில் எந்த பிரச்சினையும் இல்லை; அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம். எங்கள் நோக்கம் 40 தொகுதிகளில வெற்றி பெற வேண்டும் என்பது மட்டும்தான். தேர்தல் பணிகளை அ.தி.மு.க.வினர் முழுவீச்சில் தொடங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சி.வி. சண்முகம்
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் சி.வி. சண்முகம் பேசியதாவது, பாஜகவுடன் கூட்டணி வைக்ககூடாது என பேசவில்லை. தேர்தல் தொடர்பான பணிகள் குறித்துதான் பேசப்பட்டது. தகவல் தொடர்பு விரிவக்கம் குறித்து பேசினோம். அதிமுகவில் ஒறறுமையாக இருக்கிறோம். திமுகவின் ’பி டீம்’ தான் ஓபிஎஸ். தினகரன் சசிகலா இணைந்து திமுகவுடன் ஓபிஎஸ் கூட்டணி வைத்து கொள்ளலாம். இன்று உணர்வுப்பூர்வமான கூட்டம் நடைபெற்றது.
செல்லூர் ராஜு
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக கட்சி வலுப்பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஓ. பன்னீர்செல்வத்தை பற்றி எந்த ஒரு ஆலோசனையும் செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்