குன்னூரில் சமீபத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து யூட்யூபர் மாரிதாஸ் சர்ச்சைக்குரிய கருத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அவரின் கருத்து பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், மதுரை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மதுரை காவல் துறையினர் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, மாரிதாஸைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.


தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாரிதாஸ் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மாரிதாஸின் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். 




ஹெலிகாப்டர் விபத்து சர்ச்சை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், தனியார் தொலைக்காட்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் இன்னும் சிறையில்தான் இருக்கிறார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மாரிதாஸ் தரப்பிலிருந்து ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மாரிதாஸ் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவ காரணம் தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்ற வகையில் பேசியிருந்தார்.


இவரின் பேச்சு இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுகிறது. சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்துகிறது என்று நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளில் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 


இந்த வழக்குத் தொடர்பாக, தேனி சிறையிலிருந்த மாரிதாஸ் மீண்டும் கைதுசெய்யப்பட்டு நெல்லை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி மாரிதாஸை வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிட்டார். அதன்படி, பாளையங்கோட்டைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார்.




இந்நிலையில் இயக்குநர் அமீர் புதுச்சேரியில் விழா ஒன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த அவர், “நீங்கள் எல்லாம் படித்து பட்டம் வாங்கி உயர் பதவிக்கு வரும்போது அல்லது வாதாடக்கூடிய வழக்கறிஞர்களாக வந்து நிற்கும்போது, அங்கு சட்டம் இயற்றக்கூடிய இடத்தில் ஆரியர்கள் அமந்திருப்பார்கள் என்று பெரியார் கூறியது இன்று உண்மையாகியிருக்கிறது.


அதனால் நாம் என்னவிதமாக போராட்டத்தை நடத்தினாலும் இறுதியில் நீதிமன்றத்துக்கு சென்று தோற்கக்கூடிய சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது. நீதிபதி ஒருவரே இங்கு வழக்கறிஞராக வாதாடியது பேரதிர்ச்சியாக உள்ளது. நியாயமாக மாரிதாஸ் மீது குற்றம் இல்லை என்று சொன்னால் நிச்சயம் அவரை விடுவிக்கலாம்.




அது நீதிபதிக்கான உரிமை. ஆனால், தெள்ளத்தெளிவாக தான் போட்ட பதிவு தவறு என்று அவரே நீக்கி இருக்கும்போது, நீதிபதி அவருக்கு வழக்கறிஞராக இருந்து வாதாடி விடுவித்தது என்பது ஆரியர்களின் கையில் தேசம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த நேரத்தில் பெரியாரின் கூற்றை நினைவுப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண