பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உலகில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு ஆடு மற்றும் மாட்டுச் சந்தைகளில் வியாபாரங்கள் களைகட்டி உள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 95 சதவீத இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளப்பட்டியில் உள்ள இஸ்லாமியர்கள் தமிழகம் மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களில் வியாபார அடிப்படையில் பணியாற்றி வரும் நிலையில், தற்போது வரவுள்ள பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தனது சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு வருவார்கள். ஆண்டு தோறும் பக்ரீத் மற்றும் ரம்ஜான் பண்டிகைக்கு தனது குடும்பத்துடன் பள்ளபட்டி இஸ்லாமியர்கள் மசூதிக்குச் சென்று தொழுகையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் பள்ளப்பட்டி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு ஆடுகள் விற்பனை சுமார் ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது என கூறியுள்ளனர்.
இதை ஒட்டி கரூர், அரவக்குறிச்சி, திருப்பூர், காங்கேயம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலையிலேயே ஆடு மற்றும் மாடு வியாபாரிகள் சரக்கு ஆட்டோ, லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவற்றை வாங்குவதற்கான ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், இறைச்சி கடைக்காரர்களும், வியாபாரிகளும் சந்தைகளில் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு பேரம் பேசி வாங்கி சென்றனர்.
இதனால், ஆடுகள் விற்பனை மிக அமோகமாக நடைபெற்றது. குறிப்பாக பள்ளப்பட்டி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு பன்னிரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சற்று விலை அதிகரித்து 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூபாய் 15,000 முதல் 16 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதேபோல் ஜமுனாபுரி என்ற 65 கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை 36,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இன்று ஒரு நாள் சந்தை நிலவரத்தில் தற்போது வரை 50 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனையாகி வருகிறது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இன்று மாலைக்குள் ஒரு லட்சம் ரூபாய் ஆடுகள் விற்பனை ஆகும் என்றும், இதே நிலையில் நேற்று ஒரு நாள் ஆட்டுச் சந்தையில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை ஆகி உள்ளது எனவும் கூறினர்.