தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எங்கு எங்கு மழைக்கு வாய்ப்பு
இரவு 10 மணிவரை ராமநாதபுரம், நாமக்கல், சேலம் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது நாளை புயலாகவும், 17-ஆம் தேதியன்று தீவிரப் புயலாகவும் வலுவடையக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இப்புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அதிதீவிர புயலாக மாறி ஆந்திரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு அக்வான் என பெயர் சூட்டப்பட உள்ளது.
மேலும் வருகிற 17-ஆம் தேதியன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கும், 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் இதே மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர இதர வடமாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
